வங்கதேச தொழிற்சாலை தீ தொடர்பில் 13 பேர் மீது வழக்கு

Image caption ஆடைத் தொழிற்சாலை தீயில் உடல்கருகி உயிரிழந்த தொழிலாளர்களின் உறவினர்கள் நீதிக்காக நெடுநாளாக காத்திருக்கின்றனர்

வங்கதேசத்தில் ஓராண்டுக்கு முன்னர், ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ சம்பவம் தொடர்பில் 13 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது.

2012-ம் ஆண்டு நவம்பரில் ஏற்பட்ட இந்த தொழிற்சாலை தீயில் சிக்கி 111 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.

தொழிற்சாலையின் உரிமையாளரும் முகாமையாளரும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த 13 பேரில் அடங்குகின்றனர்.

கவனயீனமாக உயிரிழப்பை ஏற்படுத்தியதாக இவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தலைநகர் டாக்கா அருகே தொழிற்சாலை கட்டடமொன்று இடிந்து விழுந்ததில் 1,135 பேர் கொல்லப்பட்டனர்.

வங்கதேசத்தில் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இவ்வாறான தொழிற்சாலை விபத்துக்கள் அதிகரித்துள்ளதால், அங்கு தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க உறுதியான ஏற்பாடுகள் அவசியம் என்று கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.