'மீண்டும் அரசியலுக்கு வரமாட்டேன்': விடுதலையான கதர்கோவ்ஸ்கி

Image caption 'மீண்டும் திரும்பிவர முடியும் என்ற உத்தரவாதம் இல்லாவிட்டால் ரஷ்யா செல்லப் போவதில்லை': கதர்கோவ்ஸ்கி

ரஷ்யாவில் நேற்று வெள்ளிக்கிழமை சிறையிலிருந்து விடுதலையான முன்னாள் எண்ணெய் வர்த்தக செல்வந்தர் மிக்ஹையில் கதர்கோவ்ஸ்கி, அரசியல் கைதிகளுக்காக தம்மால் முடிந்தவற்றை செய்யவுள்ளதாகக் கூறியுள்ளார்.

பேர்லினில் ஊடகவியலாளர்கள் பலர் முன்னிலையில் பேசிய கதர்கோவ்ஸ்கி, அனேகமான அரசியல்கைதிகள் ரஷ்யாவிலேயே இருப்பதாகக் கூறினார்.

ரஷ்யாவிலிருந்து திரும்பி வர முடியும் என்ற உத்தரவாதம் கிடைக்காவிட்டால் அங்கு செல்லப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

தன்னை விடுவிக்க உதவியமைக்காக ஜெர்மனிய ஆட்சித் தலைவி அங்கேலா மேர்க்கலுக்கு அவர் நன்றி கூறினார்.

மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிக்கப் போவதில்லை என்றும் அவர் முன்னதாக கூறியிருந்தார்.

மோசடி மற்றும் வரி ஏய்ப்புக் குற்றங்களுக்காக 10 ஆண்டுகள் சிறையிலிருந்த அவர், அரசியல் நோக்கத்துடனேயே தன்மீது குற்றஞ்சாட்டப்பட்டதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.