கனடாவில் மோசமான வானிலை காரணமாக கடும் பாதிப்புகள்

Image caption கனடாவின் க்யூபெக் மாகாணத்தில் கடும் பனிபொழிவைக் காட்டும் படம்

கனடாவின் கிழக்குப் பகுதி மற்றும் அமெரிக்காவின் பல பகுதிகளில் உறையவைக்கும் கடும் பனிப்பொழிவு மற்றும் கடும் மழையின் காரணமாக லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பகுதிகளில் சுமார் ஒன்பது லட்சம் வீடுகளிலும் வர்த்தக நிறுவனங்களிலும் மின்சாரம் தடைபட்டுள்ளது.

கனடாவின் மிகப்பெரும் நகரான டொரண்டோவில் உள்ள சுமார் பத்து லட்சம் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில், கால்வாசி அளவிலான இடங்களில் மின்சாரம் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து பாதிப்புப்புகள்

அந்த இடங்களுக்கு மீண்டும் மின்விநியோகத்தை ஏற்படுத்த 72-மணிநேரம் வரை ஆகும் என்று கருதப்படுகிறது.

அந்நகரின் ட்ராம் சேவைகளும், பகுதியளவில் பாதாள ரயில் சேவைகளும் மூடப்பட்டுள்ளன.

இந்த கடும் பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக டொரண்டோ, ஒட்டாவா மற்றும் மொண்டிரியோல் நகரங்களிலுள்ள விமான நிலையங்களில் பிரயாணிகள் வெளியேற முடியாமல் மாட்டிக்கொண்டுள்ளனர்.

அந்த விமான நிலையங்களில் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன அல்லது தாமதமாக புறப்பட்டுச் செல்கின்றன.