போர்க்கால 'ஒரு பாலுறவு' விஞ்ஞானிக்கு " ராஜ மன்னிப்பு"

Image caption போர்க்கால கணிதவியலாளர் , ஆலன் ட்யூரிங்குக்கு , " ராஜ மன்னிப்பு"

இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மானியர்கள் பயன்படுத்திய "எனிக்மா" என்ற சங்கேதக் குறியீட்டு மொழியை கட்டுடைப்பதில் முக்கிய பங்காற்றிய, பிரிட்டிஷ் கணிதவியலாளர், ஆலன் ட்யூரிங்குக்கு, அவர் இறந்து பல ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது ராஜ மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

1952ம் ஆண்டில் அவர்,ஒரு பாலுறவில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.

இதனை அடுத்து அவருக்கு இருந்த பாதுகாப்பு அனுமதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டன.

நவீன கணினியியலின் தந்தை என்று வர்ணிக்கப்படுகின்ற டாக்டர் ட்யூரிங் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட இரண்டாண்டுகளுக்குப் பின்னர் சயனைட் விஷம் உட்கொண்டதால் இறந்தார்.

அவரது மரணம் ஒரு தற்கொலை என்று மரண விசாரணையில் தீர்ப்பளிக்கப்பட்டது.

அரசாங்கம் முன்வைத்த வேண்டுகோளை அடுத்து பிரிட்டிஷ் அரசி எலிசபத் அவருக்கு மன்னிப்பு வழங்கியிருக்கிறார்.

அவரது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க நீண்ட காலமாகவே பலர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.