இயற்கை விவசாய ஆர்வலர் நம்மாழ்வார் காலமானார்

  • 30 டிசம்பர் 2013
நம்மாழ்வார்
Image caption நம்மாழ்வார்

முதுபெரும் இயற்கை விவசாய ஆர்வலர் கோ. நம்மாழ்வார், பட்டுக்கோட்டை அருகே உள்ள பிச்சினிக்கோட்டை கிராமத்தில் திங்கட்கிழமை இரவு காலமானார். அவருக்கு 75 வயது.

தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் பிறந்த நம்மாழ்வார் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை இளங்கலைப் பட்டம் பெற்று பின்னர் சில காலம் கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் பணியாற்றினார்.

ஆனால் அரசின் செயல்முறைகளில் அதிருப்தியுற்று வெளியேறி, பின்னர் இயற்கை வழி வேளாண்மை குறித்த விழிப்புணர்வை பரப்பும் பணிக்கு தன்னை அர்ப்பணித்துக்கொண்டார்.

மாதிரிப் பண்ணை

'இந்தியாவை பொருத்தவரை மண்ணுக்கேற்ற விவசாயம் தான் இப்போதைய தேவை. கம்பு, எள், கேழ்வரகு (குரக்கன்), கொள்ளு உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்ட நிலங்கள் இப்போது தரிசு நிலங்களாக மாறிவிட்டன. இவற்றின் பயன்பாட்டை குறைத்து அரிசி, கோதுமை உணவுக்கு மக்கள் மாறியதுதான் இதற்கு காரணம்' என்றும் அவர் வலியுறுத்திவந்தார்.

கரூரை அடுத்த வானகத்தில் ஒரு தன்னார்வ மாதிரி பண்ணை உருவாக்கி வெற்றிகரமாக அதனை அவர் நடத்திவந்தார்.

அங்கிருந்த வறண்ட பாறை நிலப்பரப்பை அவர் மூன்றே ஆண்டுகளில் இயற்கை வேளாண் முறைகளைப் பயன்படுத்தி பல்லுயிர் வாழும் கானகமாக மாற்றியதாக ஆர்வலர்கள் கருதுகின்றனர்

அவரது மறைவிற்கு பல்வேறு ஆர்வலர் அமைப்புக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றன.