உதவிக்குச் சென்ற சீனக் கப்பலும் அண்டார்க்டிக்காவின் பனியில் சிக்கியது

Image caption காப்பற்றச் சென்ற சீனக்கப்பல் " ஷ்யூ லாங்" , தற்போது பனிக் கட்டிகளால் சூழப்பட்டு நிற்கிறது

அண்டார்க்டிக்காவில் பனியில் சிக்கியிருந்த ரஷ்ய ஆய்வுக் கப்பலுக்கு உதவச் சென்ற சீனப் பனிக்கட்டி உடைக்கும் கப்பலும், பயணிக்க முடியாமல் பனிக்கட்டிகளுக்கிடையே சிக்கியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் கடைசி வாரத்தில், அண்டார்க்டிக்காவில் பனிக்கட்டிகளிடையே சிக்கி, பயணிக்க முடியாமல் இருந்த ரஷ்ய ஆய்வுக்கப்பலான, அக்கடெமிக் ஷோக்கால்ஸ்கியில் இருந்த பயணிகளைக் காப்பாற்ற விரைந்த , சீன ஐஸ் உடைக்கும் கப்பலான, ஷ்யூ லாங், இப்போது பனிக்கட்டிகளால் சூழப்பட்டு பயணிக்க முடியாமல் நிற்பதாக உறுதிப்படுத்தியிருக்கிறது.

வியாழனன்றுதான், இந்த சீனக் கப்பலில் இருந்த ஹெலிகாப்டர் மூலம், ரஷ்ய ஆய்வுக் கப்பலில் இருந்த 52 பயணிகள், ஆஸ்திரேலியக் கப்பலான, அரோரா ஆஸ்த்ரேலிஸ் என்ற கப்பலுக்கு மாற்றப்பட்டனர்.

அண்டார்க்டிக்கா பனிக்கட்டிகளுக்கு ஊடாகப் பயணிக்க இந்த சீனக் கப்பல் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை என்றும், இப்போது அது பனிக்கட்டிகளால் சூழப்பட்டு நிற்கிறது என்று உறுதிப்படுத்தி இருப்பதாகவும் ஆஸ்திரேலியக் கடல் பயணப் பாதுகாப்பு நிறுவனமான, அம்சா, சனிக்கிழமை விடுத்த அறிக்கை ஒன்றில் கூறியிருக்கிறது.

'சீனக் கப்பல் பணியாளர்களுக்கு ஆபத்தில்லை'

சீனக் கப்பலில் இப்போது 111 பேர் இருக்கிறார்கள். ரஷ்யக் கப்பலில் இன்னும் 22 கப்பல் ஊழியர்கள் இருக்கிறார்கள்.

ஷ்யூ லாங் கப்பலின் தலைவர், கப்பல் பாதுகாப்பாக இருப்பதாகவும், இப்போதைக்கு அதற்கு உதவி எதுவும் தேவைப்படவில்லை என்றும் கூறியிருப்பதாக அம்சா தனது அறிக்கையில் கூறுகிறது. இந்த ஐஸ் உடைக்கும் கப்பலின் பணியாளர்களின் உயிருக்கு உடனடி ஆபத்து ஏதும் இல்லை என்றும் அது கூறுகிறது.

இதனிடையே, ரஷ்ய ஆய்வுக் குழுவின் உறுப்பினர்கள்,சீனக் கப்பல் குழுவினர் தங்களை மீட்க எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டியிருக்கிறார்கள்.

உண்மையில் மிகவும் கடினமான சூழ்நிலையிலும், அவர்கள் திறமையாகவும், விரைவாகவும், ஒருங்கிணைந்த முறையிலும் செயல்பட்டனர், என்று அவர்களை பாராட்டினார் ஆய்வுக்குழுவில் ஒருவரான, பேராசிரியர் ட்ரேசி ரோஜர்ஸ்.