ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மலேசியாவில் மனித உரிமைகள் கூட்டமைப்புக்கு தடை

Image caption மலேசியாவில் கருத்துச் சுதந்திரம் முடக்கம்?

மலேசியாவில் மனித உரிமைகள் மற்றும் இதர மக்கள் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுத்துவரும் ‘கொமாங்கோ’ எனப்படும் கூட்டமைப்பை தடை செய்து மலேஷிய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசின் இந்த நடவடிக்கை உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.

சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷணல், மலேசிய அரசின் இந்த தடைஉத்தரவு கருத்துச் சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல் என்று கூறியுள்ளது.

Image caption மலேசிய மனித உரிமைகள் இயகத்தின் தலைவர் ஆறுமுகம்

கொமாங்கோ அமைப்பின் செயல்பாடுகள் இஸ்லாமுக்கு எதிரான வகையில் உள்ளன என்றும், முறையாக பதிவு செய்து கொள்ளாத காரணத்தினாலேயே அது தடை செய்யப்பட்டுள்ளது என்று மலேசிய உள்துறை அமைச்சகம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

மலேசிய அரசாங்கம் இஸ்லாம் என்கிற போர்வையில் மனித உரிமை அமைப்புகளின் செயல்பாட்டை ஒடுக்கும் ஒரு முயற்சியே இந்த நடவடிக்கை என்று கொமாங்கோ அமைப்பின் ஒரு அங்கமாக இருக்கும் மலேசிய மனித உரிமைகள் இயக்கத்தின் தலைவர் கா. ஆறுமுகம் பிபிசி தமிழோசையிடம் சுட்டிக்காட்டினார்.

ஒருபால் உறவுக்காரர்களின் உரிமைகளுக்காகவும் கொமாங்கோ குரல் கொடுத்தது என்றும், அது இஸ்லாமிய கடும்போக்குவாதிகளுக்கு அதிருப்தி ஏற்படுத்திய காரணத்தால் அரசுக்கு அழுத்தம் கொடுத்து இந்தத் தடை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார்கள் எனவும் அவர் கூறுகிறார்.

இந்தத் தடைக்கு எதிராக நீதிமன்றத்துக்கு சர்வதேச மட்டத்துக்கு இதை எடுத்துச் செல்லப் போவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.