காண்டாமிருக வேட்டை அனுமதி: அமெரிக்காவில் விசித்திர ஏலம்

Image caption அருகிவரும் உயிரினத்தை ஏலம்போட்டுக் கொல்வதா?: மிருக ஆர்வலர்கள் கொதிப்பு

நமீபியாவில் அருகிவரும் விலங்கினத்தைச் சேர்ந்த கறுப்புக் காண்டாமிருகம் ஒன்றை வேட்டையாடிக் கொல்வதற்கான அனுமதிப் பத்திரமொன்று அமெரிக்காவில் பெருந்தொகை பணத்திற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.

டெக்ஸாஸ் மாநிலத்தில் நடந்த ஏலவிற்பனையில் மூன்றரை லட்சம் டாலர்களுக்கு இந்த வேட்டை அனுமதிப் பத்திரம் விலைபோயுள்ளது.

இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த பணம் அனைத்தும் காண்டாமிருக பாதுகாப்பு நிகழ்ச்சித் திட்டங்களில் செலவிடப்படும் என்று டலஸ் சஃபாரி கிளப் நிறுவனம் தெரிவித்தது.

நமீபிய அரசாங்கத்தின் கோட்டா- ஒதுக்கீட்டின் படி, இந்த அனுமதிப் பத்திரத்தின் மூலம் மிக வயதான- ஆபத்தான ஆண் காண்டாமிருகம் ஒன்றை மட்டுமே வேட்டையாட முடியும்.

ஆனால், இந்த ஏலவிற்பனையை மிருகநலச் செயற்பாட்டாளர்கள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

அருகிவரும் உயிரினமொன்றைக் கொலை செய்யும் நிகழ்வை கண்காட்சியாக்கும் வேலையே இந்த ஏலவிற்பனை மூலம் நடப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

தமது பணியாளர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக டலஸ்சஃபாரி கிளப் நிறுவனம் கூறியிருந்த நிலையில், மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் இந்த ஏலவிற்பனை நடைபெற்றுள்ளது.

காடுகளில் வாழும் கறுப்புக் காண்டாமிருகங்களின் எண்ணிக்கை 50 ஆண்டுகளுக்கு முன்னர் சுமார் 70 ஆயிரமாக இருந்தது.

ஆனால் தற்போது அந்த எண்ணிக்கை வெறும் நாலாயிரமாக குறைந்துவிட்டது.

காண்டாமிருகங்கள், அவற்றின் கொம்புகளுக்காக சட்டவிரோதமாக வேட்டையாடப்படுகின்றன.

குறிப்பாக, கிழக்காசிய நாடுகளில் மருத்துவத் தேவைகளுக்காக இந்தக் கொம்புகள் விலைபோகின்றன.