உலகப்போர் வீரர்களின் டயரிகள் இணையத்தில் பிரசுரம்

  • 14 ஜனவரி 2014
படத்தின் காப்புரிமை 1
Image caption ஒரு உலகப் போர் கடிதம் ( ஆவணப்படம்)

முதலாம் உலகப் போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள், போரின்போது எழுதிய டயரிக்குறிப்புகள் பிரிட்டனின் தேசிய ஆவணக் காப்பகத்தால் இணையத்தில் பிரசுரிக்கப்படுகின்றன.

1914ம் ஆண்டில் முதலாம் உலகப் போர் தொடங்கியதிலிருந்து பிரான்சில் ப்ளாண்டர்ஸிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேறியது வரையிலான காலகட்டத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி பிரிட்டிஷ் ராணுவப் பிரிவுகள் அதிகார பூர்வமான டயரிகளில் எழுதி வைத்திருந்தன.

மொத்தம் சுமார் 1.5 மிலியன் டயரிப் பக்கங்கள் தேசிய ஆவணக்காப்பகத்தால் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில், ஐந்தில் ஒரு பங்கு பக்கங்கள் இது வரை டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

இந்த டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்ட 1944 டயரிகளில் எழுதப்பட்டிருக்கும் குறிப்புகள், பிரிட்டன் போரில் முதலில் பயன்படுத்திய முன்று குதிரைப்படை மற்றும் ஏழு காலாட்படைப் பிரிவுகளின் அனுபவங்களை விளக்குகின்றன.

தனிப்பட்ட டயரிக் குறிப்புகளும் இணையத்தில்

அதிகாரபூர்வ டயரிக்குறிப்புகள் தவிர, போரில் பங்கேற்ற பிரிட்டிஷ் ராணுவத்தினர் எழுதிய தனிப்பட்ட டயரிக்குறிப்புகள் சிலவும் டிஜிட்டல் முறையில் பாதுகாக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்படுகின்றன.

முதல் பட்டாலியனின் கேப்டன் ஜேம்ஸ் பேட்டர்ஸன் எழுதி வைத்திருந்த சொந்த டயரியும் இது போல டிஜிட்டல் வடிவில் பாதுகாக்கப்படுகிறது.

கேப்டன் பேட்டர்ஸன், தனது குறிப்பு ஒன்றில், போரின் போது தான் கண்ட காட்சிகள் "விவரிக்க முடியாதவை" என்று கூறியிருந்தார்.

"பதுங்கு குழிகள் ,பொருட்கள், ரத்தக்கறை தோய்ந்த ஆடைகளின் பகுதிகள் , வெடி மருந்துகள், கருவிகள், தொப்பிகள் மேலும் இன்ன பிற பொருட்கள் தாறுமாறாக சிதறிக்கிடக்கின்றன. எல்லாத் திசைகளிலும் மனித உடல்கள், அவைகளில் சில நமது ஆட்களின் உடல்கள்", என்று அவர் ஒரு குறிப்பில் விவரித்திருந்தார்.

இந்தக் குறிப்பை எழுதிய ஆறு வாரங்களில் அவரும் கொல்லப்பட்டார்.

இந்த டயரிகளை இணையத்தில் பிரசுரிக்கும் திட்டம், முதலாம் உலகப்போரின் நூற்றாண்டைக் குறிக்கும் நிகழ்வுகளில் ஒரு பகுதியாகும்.

நூற்றுக்கணக்கான பெட்டிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த டயரிகளை 25 தன்னார்வலர்கள் ஸ்கேன் செய்து இந்த வேலையை செய்து வருகின்றார்.

வரலாற்று ஆர்வலர்களுக்கு புதிய வாய்ப்பு

இந்த டயரிகள் பிரசுரிக்கப்படுவதன் மூலம், பொதுமக்கள், வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் மற்றும் குடும்ப வரலாற்றை எழுதுபவர்கள், உலகெங்கிலும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் போன்றோருக்கு, அதிகாரபூர்வ ஆவணங்களைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைக்கிறது என்று கூறினார், தேசிய ஆவணக் காப்பகத்தில் ராணுவ ஆவணங்கள் பிரிவில் வல்லுநராகப் பணிபுரியும் வில்லியம் ஸ்பென்சர்.

இதன் மூலம் இந்த முக்கியமான காலகட்டத்தினைப் பற்றி, புதிய கண்டுபிடிப்புகளும் புதிய பார்வைகளும் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தற்காலத்தில், முதலாம் உலகப்போரின் போது பங்கேற்ற வீரர்கள் யாரும் உயிருடன் இல்லாத நிலையில், இந்த டயரித் திட்டம் அவர்களது குரல்களை நாம் கேட்க வகை செய்வதாகக் கூறினார் பிரிட்டிஷ் கலாசார அமைச்சர் மரியா மில்லர்.

முதலாம் உலகப் போரில் பங்கேற்ற கடைசி பிரிட்டிஷ் வீரர், ஹாரி பேட்ச், 2009ல் தனது 111வது வயதில் காலமானார்.

உலகின் கடைசி முதல் உலகப்போர் வீரர், க்லாட் ஷூல்ஸ் , ஆஸ்திரேலியாவில், தனது 110வது வயதில், 2011ல் காலமானார்.