பிபிசி செய்தியாளர் கொம்லா டுமொர் காலமானார்

  • 19 ஜனவரி 2014
Image caption தனது தலைமுறையில் உருவான மிகச்சிறந்த ஆப்பிரிக்க ஊடகவியலாளர்களில் ஒருவர் கொம்லா டுமொர்

பிபிசி ஊடகவியலாளரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான கொம்லா டுமொர் காலமானார். உயிரிழக்கும்போது அவருக்கு வயது 41.

திடீரென்று மாரடைப்பு காரணமாக லண்டனில் உள்ள அவரது இல்லத்தில் கொம்லா டுமொர் உயிரிழந்தார்.

கொம்லா டுமோர், அவரது தலைமுறையில் உருவான முன்னணி ஆப்பிரிக்க ஊடகவியலாளர்களில் ஒருவராக கருதப்படுகிறார்.

அவரது சொந்த நாடான கானாவின் அதிபர் ஜோன் ட்ராமனி மகாமா, 'தமது நாடு உலகுக்கு பரிசளித்த மனிதரே கொம்லா டுமொர்' என்று வர்ணித்துள்ளார்.

தமது நாட்டின் மிகச்சிறந்த அடையாள- தூதர்களில் ஒருவரை கானா இழந்துவிட்டது என்றும் அதிபர் கூறியுள்ளார்.

ஆப்பிரிக்காவுக்கான பிபிசியின் முதலாவது தினசரி தொலைக்காட்சி நிகழ்ச்சியின் முன்னணி தொகுப்பாளராகவும் கொம்லா டுமொர் அண்மை முதல் பணியாற்றிவந்தார்.

அதற்கு முன்னர் கானாவில் வானொலி ஒன்றிலும் பிபிசியிலும் அவர் பணியாற்றிவந்தார்.

'கொம்லா டுமொர் மக்களின் உள்ளங்களில் வாழ்ந்த ஒரு திறமையான ஒலிபரப்பாளர், மற்றவர்களோடு அன்புடனும் மகிழ்ச்சியாகவும் பழகியவர்' என்று பிபிசி உலகசேவையின் செய்தியாசிரியர் அன்றூ வைட்ஹெட் கூறியுள்ளார்.