ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மலேசியா: சட்டவிரோத தொழிலாளர்களும், சர்ச்சைகளும்

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கி வேலை செய்பவர்களை தேடிக் கண்டுபிடித்து, அவர்களை நாட்டைவிட்டு வெளியேற்றும் நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகிறது.

Image caption வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த ஒரு கூட்டம்

வெளிநாட்டிலிருந்து மலேசியாவுக்கு பணிக்காக வந்துள்ளவர்கள் தமது ஆவணங்களை சரி செய்துகொள்ள கடந்த திங்கட்கிழமை(21.1.14)வரை மலேசிய அரசு அனுமதி அளித்திருந்தது.

அப்படி பதிவு செய்துகொள்ளாதவர்களை வெளியேற்ற அரசு எடுக்கும் நடவடிக்கை சூடுபிடித்து வரும் வேளையில், அரசு கையாளும் முயற்சிகள் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

பல தன்னார்வ அமைப்புகள் அரசின் இந்தச் செயல் குறித்து தங்களது அதிருப்தியை வெளியிட்டுள்ள அதே வேளை, இந்த நடவடிக்கை உள்நாட்டின் பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்றும் கவலை வெளியிட்டுள்ளனர்.

அரசின் திட்டப்படி சட்டவிரோதமானவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களை வெளியேற்றும் பட்சத்தில், அவர்கள் செய்துவந்த வேலைக்கு உள்நாட்டில் ஆட்கள் கிடைப்பதிலும் மிகுந்த சிரமங்கள் ஏற்படும் என்று பிபிசி தமிழோசையிடம் கூறினார், வெளிநாட்டுப் பணியாளர்களின் குறைகளைக் களைவதற்கான கூட்டமைப்பைச் சேர்ந்த ராணி ராசைய்யா.

இப்போது வெளிநாட்டிலிருந்து வந்து வேலை செய்பவர்கள் குறைந்த ஊதியங்களுக்கும், குறைவான வசதிகளுக்கும் இடையே பணியாற்றுகிறார்கள் என்றும், அப்படியான சூழலுக்கு உள்நாட்டு மலேசியத் தொழிலாளர்கள் வருவார்களா என்பது கேள்விக்குறியே என்றும் அவர் கூறுகிறார்.

பல சந்தர்பங்களில் வெளிநாட்டிலிருந்து வரும் தொழிலாளர்களின் பாஸ்போர்ட்-கடவுச் சீட்டை முதலாளிகள் கைப்பற்றி வைக்கின்றனர் என்றும்,இது சட்டரீதியாக சரியில்லை என்பது தெரிந்தாலும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் ராணி ராசைய்யா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

இப்பிரச்சினை குறித்து மலேசிய அரசின் கருத்துக்களை பெறமுடியவில்லை.