'காஷ்மீரில் பத்ரிபால் கிராமக் கொலைகளுக்கு ஆதாரம் இல்லை'

'காஷ்மீரில் பத்ரிபால் கிராமக் கொலைகளுக்கு ஆதாரம் இல்லை' படத்தின் காப்புரிமை AP
Image caption 'காஷ்மீரில் பத்ரிபால் கிராமக் கொலைகளுக்கு ஆதாரம் இல்லை'

இந்திய அதிகாரத்திற்குட்பட்ட கஷ்மீர் பகுதியில் அப்பாவி மக்களை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க போதுமான ஆதாரம் இல்லை என்று இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.

2000ஆம் ஆண்டில் பாத்ரிபால் கிராமத்தில் 7 அப்பாவி பொதுமக்களைக் கொன்றதாக 5 இராணுவ அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஆனால் அந்த 7 பேரும் வெளிநாட்டு பயங்கரவாதிகள் என்று அந்த அதிகாரிகள் கூறினர். பின்னர் கொல்லப்பட்டவர்களின் உடலை தோண்டி எடுத்த காவல் துறையினர், அது அருகில் இருந்த கிராமத்திலிருந்து காணாமல் போன கிராமவாசிகள் என்று கண்டுபிடித்தனர். இதன் தொடர்பில் விசாரணை நடத்திய சிபிஐ, இது போலியான என்கவுண்டர் என்றும், தெரிந்தே செய்யப்பட்ட கொலை என்றும் அறிவித்தது. இது தொடர்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், இந்த விசாரணை இராணுவ நீதிமன்றத்தில் நடைபெற வேண்டுமா அல்லது பொது நீதிமன்றத்தில் நடைபெற வேண்டுமா என்று இராணுவம் தான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனை அடுத்து இந்த விசாரணை இராணுவ நீதிமன்றத்தில் நடைபெற வேண்டும் என்று இராணுவம் முடிவு செய்தது. உள்ளூர் கிராமவாசிகள் உட்பட 50 சாட்சிகளிடம் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக, இராணுவத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்தார். குற்றஞ்சாட்டப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க இதுவரை பதிவு செய்யபட்ட ஆதாரங்கள் போதுமானதாக அமையவில்லை என்று அந்த இராணுவத்தின் சார்பில் பேசவல்லவர் கூறினார். மேலும் இராணுவமும் காவல் துறையும் சேர்ந்து ஒத்துழைத்து தான் இந்த புலனாய்வு பணியை மேற்கொண்டது என்றும் அவர் கூறினார். இந்த வழக்கு இத்துடன் மூடப்பட்டுள்ளது என்று சிறிநகர் மேகிஸ்டிரேட் நீதிமன்றத்திற்கு தகவல் அனுப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இந்த நிலையில் இராணுவத்தின் இந்த முடிவு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார் கஷ்மீர் முதலமைச்சர் ஒமர் அப்துல்லா. ‘முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாத்ரிபால் கொலை வழக்கு இவ்வாறு மூடப்படக்கூடாது, அதுவும் இது குறித்து சிபிஐயின் ஆதாரங்கள் தெளிவாக இருக்கும் நிலையில் அது மூடப்படக் கூடாது’ என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.