இ-சிகரெட்டை 18 வயதுக்கு கீழ் தடைசெய்ய பிரிட்டன் சட்டம்

படத்தின் காப்புரிமை Getty
Image caption இ- சிகரெட், உண்மையான சிகரெட்டைவிட பாதுகாப்பானது என்று கருதப்பட்டுவருகிறது

இங்கிலாந்தில் இலக்ட்ரோனிக் சிகரெட்டுகளை (மின்னணு மூலம் புகை போன்ற வாயுவை உருவாக்கும் நவீன சிகரெட்) 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு விற்பனை செய்வதை தடைசெய்து பிரிட்டிஷ் அரசாங்கம் புதிய சட்டத்தைக் கொண்டுவரவுள்ளது.

இ- சிகரெட் மூலம், இளம் பராயத்தினர் நிக்கோட்டின் சுவைக்கு பழகிவிடக்கூடும் என்று மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இதனால், அதிகளவான இளம் பராயத்தினர் உண்மையான சிகரெட்டுகளை புகைக்கப் பழகிவிடுவார்கள் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

புகையிலை சிகரெட்டுகளை விட இ- சிகரெட்டுகள் சுகாதார ரீதியில் பாதுகாப்பானவை என்று கருதப்படுகிறது. ஆனால் அவற்றால் பாதிப்பு இல்லாமல் இல்லை.

நீண்டகாலத்தில் என்ன வகையான பாதிப்புகளை இந்த இ-சிகரெட்டுகள் ஏற்படுத்தும் என்பது பற்றியும் எவருக்கும் தெரியாது.

இதேவேளை, இங்கு இங்கிலாந்தில் சிறார்களுக்காக பெரியவர்கள் உண்மையான சிகரெட்டை வாங்குவதும் சட்டவிரோதம் என்று அறிவிக்கும் சட்டமும் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.