சிறுவனைத் தாக்கிய ஆஸ்திரேலிய முதலை: போலிஸ் தேடுதல் வேட்டை

படத்தின் காப்புரிமை AP
Image caption உப்பு நீரில் வாழும் ஆஸ்திரேலிய முதலை

ஞாயிறன்று, வட ஆஸ்திரேலியாவின் , காக்காடு தேசியப் பூங்காவில், 12 வயது சிறுவன் ஒருவனைத் தாக்கித் தூக்கிச் சென்ற ஆஸ்திரேலிய முதலையையும், அந்தச் சிறுவனையும், போலிசார் தேடி வருகின்றனர்.

போலிசார் இந்தச் சிறுவனை மீட்கவும், முதலையைப் பிடிக்கவும் நடத்தி வரும் தேடுதல் வேட்டையில் வேறு இரு முதலைகள் சுடப்பட்டன.

இந்த தேசியப் பூங்காவில் ஒரு நீர் நிலையில் நண்பர்கள் சிலருடன் குளித்துக்கொண்டிருந்தபோது, இந்தச் சிறுவன் முதலையால் தாக்கப்பட்டு தூக்கிச்செல்லப்பட்டான்.

அந்த முதலையால் தாக்கப்பட்ட மற்றொரு சிறுவன், படுகாயங்களுடன் உயிர் தப்பினான்.

நேற்றிரவு முழுவதும் ஆஸ்திரேலியப் போலிசார் இந்த முதலை மற்றும் அது தூக்கிச் சென்ற அந்தச் சிறுவனைத் தேடினர்.

கொல்லப்பட்ட இந்த இரு முதலைகளும் 14 முதல் 15 அடி நீளம் உள்ளவை. அவைகளைப் பார்வையிட்ட போலிசார், அவற்றின் வயிற்றில் எதுவும் இல்லை என்று தெரிவித்தனர்.

இன்றும் தேடுதல் வேட்டை தொடரும் என்று போலிசார் கூறுகின்றனர்.

காக்காடு தேசியப் பூங்காவில் உள்ள நீர் நிலைகளில் யாரும் குளிக்கவேண்டாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அந்த நீர் நிலைகளில் முதலைத் தாக்குதல்கள் நடக்கும் ஆபத்து இருப்பதால் இந்த எச்சரிக்கையை அவர்கள் விடுத்திருக்கிறார்கள்.

உப்பு நீரில் வாழும் வட ஆஸ்திரேலிய முதலைகள் 23 அடி ( சுமார் 7 மீட்டர்) நீளம் வரை வளரும், சுமார் ஒரு டன் எடை கொண்டவை அவை.

வட ஆஸ்திரேலியாவில் ஆற்றில் நீந்திக்கொண்டிருந்த ஒருவர் ஆகஸ்டில், முதலையால் தாக்கிக் கொல்லப்பட்டார்.