பிரிட்டிஷ் அரசி அலுவலகச் செலவை கட்டுப்படுத்தக் கோரிக்கை

படத்தின் காப்புரிமை Getty
Image caption செலவைச் சரிக்கட்ட அரண்மனையை சுற்றுலாப் பயணிகள்க்குத் திறந்து விட யோசனை

பிரிட்டிஷ் அரசியின் அலுவலகத்துக்கு தேவைப்படும் நிதியை மேம்படுத்த, லண்டனில் உள்ள அரசியின் அதிகாரபூர்வ இல்லமான, பக்கிங்ஹாம் அரண்மனை பொதுமக்கள் சென்று பார்க்க மேலும் அடிக்கடி திறந்துவிடப்படவேண்டும் என்று பிரிட்டிஷ் நாடாளுமன்ற மூத்த உறுப்பினர் ஒருவர் கூறியிருக்கிறார்.

அரசியார் லண்டன் இல்லத்தில் இல்லாத காலங்களில், டிக்கெட் வாங்கி அரண்மனையைப் பார்க்க விரும்பும் பொதுமக்கள், இந்த அரண்மனையின் மேலும் பல பகுதிகளைப் பார்க்க அனுமதிக்கப்படவேண்டும் என்று, நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுவின் தலைவி, மார்கரட் ஹோட்ஜ் கூறியிருக்கிறார்.

தற்போது ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் மட்டும், பக்கிங்ஹாம் அரண்மனையின் ஒரு சில தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகள் மட்டும் பொதுமக்கள் சென்று பார்க்கத் திறந்துவிடப்படுகின்றன.

அரசியின் இல்ல அலுவலகம் பணத்தைச் செலவு செய்யும் முறையை விமர்சித்திருக்கும் நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழு, வருவாயை உயர்த்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், இன்னும் வழிகள் இருப்பதாகக் கூறியிருக்கிறது.

அரசியின் இல்ல அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது பற்றி பரிசீலிக்கவேண்டும் என்றும் அது கூறியிருக்கிறது.

கடந்த ஆண்டு, பாதுகாப்பு செலவினம் தவிர, அரசகுடும்பச் செலவுகளுக்கு 50 மிலியன் டாலர்கள் செலவானது.

ஆனால் இந்தச் செலவு பெரிய செலவல்ல, நாட்டிற்குப் பயன் தரும் செலவுதான் என்று அரசி அலுவலக அதிகாரிகள் கூறுகிறார்கள்.