அமெரிக்க நாட்டுப்புற இசைக் கலைஞர் பீட்ட சீகர் காலமானார்

படத்தின் காப்புரிமை AP
Image caption பீட்ட சீகர்-- அரசியல் போராளி , இடது சாரிக் கலைஞர்

அமெரிக்க நாட்டுப்புற இசையின் மிக முக்கிய புள்ளிகளில் ஒருவராகக் கருதப்படும் பீட்ட சீகர், காலமானார்.

அவருக்கு வயது 94.

சிறிது காலம் நோய்வாய்ப்பட்டிருந்த சீகர், நியுயார்க் மருத்துவமனை ஒன்றில் காலமானார்.

அமெரிக்க கறுப்பினத்தவர்கள் நடத்திய சிவில் உரிமைகளுக்கான போராட்டத்தில், சீகரின் பாடல்கள் பெரும்பங்கு வகித்தன. இவற்றில் அவர் இயற்றிப் பாடிய "வேர் ஹெவ் ஆல் தெ ப்ளவர்ஸ் கான்" ( Where have all the Flowers Gone) என்ற பாடலும் அடங்கும்.

அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் உறுப்பினரும், அரசியல் ஆர்வலருமான சீகரை, கம்யூனிச ஊடுருவலுக்கு எதிரான அரசியல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட மக்கார்த்தி ஆண்டுகளில் , தொலைக்காட்சி நிறுவனங்கள் தவிர்த்தன.

அந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்புடையவர்களாக சந்தேகிக்கப்பட்டவர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டன.

ஆனால் சீகர் மீண்டும் பொது வெளிக்கு வந்தார். குறிப்பாக, 2009ம் ஆண்டில் அதிபராக பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டு அவர் பதவியேற்பைக் குறிக்க வாஷிங்டனில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடினார்.