சர்ச்சையில் சிக்கிய சாப்பாட்டுக்கடை

Image caption சர்ச்சையில் சிக்கியுள்ள உணவகம் இதுதான்

பாகிஸ்தானில் தலைநகர் இஸ்லாமாபாதில் ஒரு உணவகத்தை திறந்தார் பிரான்ஸைச் சேர்ந்த ஒரு சமயல் கலைஞர். வியாபாரம் நடந்ததோ இல்லையோ பிரச்சினைகள் மட்டும் உடனடியாக எழுந்தன.

முஸ்லிம் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகக் கூறி, பாகிஸ்தானிய முஸ்லிம்களுக்கு உணவு வழங்க ‘ல மெசோ(ன்)’ உணவகத்தில் சமயலுக்கு பொறுப்பானவர் மறுத்துவிட்டார்.

அந்த உணவகத்தில் மதுவும், ஹலால் முறைப்படி தயாரிக்கப்படாத உணவும் அங்கு விற்கப்படுவதாலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்த உணவகம் கூறுகிறது.

ஆனால் ஆச்சரியமளிக்காத வகையில், பல பாகிஸ்தானியர்கள் இது குறித்து கோபமடைந்தனர். உடனடியாக டிவிட்டரில் பெரிய கருத்து மோதல், கூச்சல் குழப்பங்கள் கண்டனங்கள் ஆகியவை மேலோங்கின.

"முடிவில் மாற்றமில்லை"

Image caption ல மெசோ(ன்) உணவகத்தின் சமயலறை

இஸ்லாமாபாதில் திறக்கப்பட்டுள்ள ஒரு உணவகத்தில் பாகிஸ்தானியர்களுக்கு அனுமதியில்லை என்று கூறுவது சரியல்ல என்று கூறி உள்ளூர் பத்திரிக்கையாளர் டிவிட்டரில் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தார்.

நிறவெறிக் கொள்கையை அந்த உணவகம் முன்னெடுக்கிறது என்று அந்தச் செய்தியாளர் டிவிட்டரில் கூற பிரச்சினை மேலும் சிக்கலானது. அந்த உணவகத்தின் முடிவானது நகைப்புக்குரிய, முட்டாள்தனமான, நடைமுறைக்கு ஒத்துவராத விஷயம் என்று அல்மைடா எனும் அந்தச் செய்தியாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஆனாலும் அந்த உணவகத்தின் உரிமையாளரோ தமது கருத்தில் எந்த மாறுதல் இல்லை என்றும், அந்த உணவகம் ஒரு கிளப்பாக மாற்றப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களின் உணவு வழக்கங்களுக்கு ஏற்ற வகையில், தமது சாப்பாட்டுக்கடையில் உணவு இல்லை என்பதாலேயே அந்த முடிவுக்கு வந்ததாக அவர் கூறுகிறார்.

அடுத்த சில நாட்களில் இந்த உணவகம் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி என்று கூறும் ஒரு கிளப்பாக மாறவுள்ள நிலையில் அது பிரச்சினைகளைக் கடந்து வெற்றிகரமாக நடக்குமா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்விக்குறி.