நூற்றுக்கணக்கான அரியவகை உயிரினங்கள் விமான நிலையத்தில்

படத்தின் காப்புரிமை MIONA JANEKE

மடகஸ்காரைச் சேர்ந்த, நூற்றுக் கணக்கான, அரியவகை ஊர்வன (reptile) மற்றும் ஈருடகவாழி (amphibian) உயிரினங்கள் உயிரிழந்த நிலையில் தென்னாபிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் சர்வதேச விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பச்சோந்திகள், ஓணான்கள், பல்லிகள், தவளைகள், தேரைகள் என சுமார் 1600 உயிரினங்கள் இரண்டு பெட்டிகளில் கண்டுபிடிக்கப்பட்டன.

அமெரிக்காவில் உள்ள வளர்ப்பு பிராணி கடைகளுக்காக இந்த உயிரினங்கள் கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

வட- அமெரிக்காவில் நிலவும் கடுமையான குளிர் காலநிலை காரணமாக 5 நாட்களுக்கும் மேலாக ஏற்பட்ட தாமதங்களால் இந்த உயிரினங்களுக்கு உணவு- தண்ணீர் கிடைக்காமல் போயுள்ளது.

இந்த உயிரினங்களை இறக்குமதி செய்த நிறுவனம் முறையான அனுமதிப் பத்திரங்களை வைத்திருப்பதாக நம்பப்படுகிறது

ஆனால் வன-உயிர் பாதுகாப்புக்கான செயற்பாட்டாளர்கள், மிருகவதை முறைப்பாடுகளை செய்ய திட்டமிட்டுள்ளனர்.

300க்கும் மேற்பட்ட உயிரினங்கள் உயிரிழந்துள்ளன. எஞ்சியுள்ள உயிரினங்களைப் பாதுகாக்க மிருக வைத்தியர்கள் முயன்றுவருகின்றனர்.