தேர்தலுக்கு முன்னதாக தாய்லாந்தில் துப்பாக்கிச் சூடு

படத்தின் காப்புரிமை Reuters
Image caption எதிரணி செயற்பாட்டாளர்கள் தேர்தலை பகிஸ்கரிக்கின்றனர்

தாய்லாந்தில் நாளை ஞாயிற்றுக் கிழமை நடக்கவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, தலைநகர் பாங்கொக்-இல் இன்று அரசாங்க மற்றும் எதிரணி ஆதரவாளர்களிடையே வன்முறை மோதல்கள் மூண்டுள்ளன.

குண்டுத் தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சண்டைகளில் பலர் காயமடைந்துள்ளனர். எதிரணியினர் இந்தத் தேர்தலை பகிஸ்கரிக்கின்றனர்.

வாக்காளர் அட்டை விநியோகத்தை தடுக்கும் முயற்சிகளிலும் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

'ஊழல் மிக்க அரசாங்கம் பதவிவிலக வேண்டும்' என்று எதிரணியினர் கேட்டுவருகின்றனர்.

பிரதமர் யிங்லுக் ஷினோவத்தின் சகோதரர் தக்ஷின் ஷினோவத் மீண்டும் நாடு திரும்புவதற்கு வழிசமைக்கும் சர்ச்சைக்குரிய பொதுமன்னிப்பு சட்ட மூலத்தை தாய்லாந்து

நாடாளுமன்றத்தின் கீழவை ஆதரித்திருந்த நிலையிலேயே, கடந்த நவம்பரில் போராட்டங்கள் வெடித்தன.

போராட்டங்களை தடுப்பதற்காக பிரதமர் யிங்லுக் முன்கூட்டியே தேர்தலை நடத்துகிறார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை 10 வீதமான வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு நடக்காது என்று தேர்தல் ஆணையாளர் ஒருவர் கூறியுள்ளதாக செய்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.