தடுப்புக்காவலில் குழந்தைகள்: ஆஸ்திரேலிய மனித உரிமை ஆணையம் விசாரணை

ஆஸ்திரேலியா வந்த அகதிப் படகில் ஒரு குழந்தை படத்தின் காப்புரிமை AP
Image caption ஆப்கானிஸ்தான், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் அகதிகள் வருகின்றனர்.

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள குழந்தைகள் கட்டாயமாக தடுத்துவைக்கப்பட்டு வருகின்ற நடைமுறை மீது அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை ஒன்றுக்கு உத்தரவிட்டுள்ளது.

"தடுத்துவைக்கப்பட்டிருப்பவர்கள் சிறு பிள்ளைகள் என்ற போதிலும் அவர்களது நடமாட்ட சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் முக்கியமான வளர்ச்சிப் பருவத்தை கம்பி வேலிகளுக்கு இடையில் மிகுந்த கஷ்டமான சூழ்நிலையில் இவர்களில் பலர் கழிக்க வேண்டியுள்ளது என்றும் கூறி ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் கில்லியன் டிரிக்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தஞ்சம் கோரி வருவோரின் பிள்ளைகளை கட்டாயமாக தடுத்துவைப்பது என்பது ஆஸ்திரேலியாவுக்கு இருக்கின்ற மனித உரிமை கடப்பாடுகளுக்கு பொருந்தாத விஷயமாக உள்ளது என்றும் பிள்ளைகளை நெடுங்காலம் தடுப்புக்காவல் முகாம்களில் வாழவைப்பது அவர்களுக்கு மோசமான உளநலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது என்றும் என இவ்வாணையம் 2004ஆம் ஆண்டிலேயே சுட்டிக்காட்டியிருந்தது.

தஞ்சம் கோரி வருபவர்களின் பிள்ளைகள் சிறிது காலம் தடுத்துவைக்கப்பட்டு அவர்களின் அடையாளம், உடல்நலம் போன்றவை உறுதிசெய்யப்படுவது அவசியம்தான் என்றாலும், 6 மாதங்கள்,15 மாதங்கள் என நெடுங்காலத்துக்கு பிள்ளைகள் தடுத்துவைக்கப்படுவது சர்வதேச சட்டங்களை மீறுவதாக உள்ளது என பேராசிரியர் கில்லியன் டிரிக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இந்தப் பிள்ளைகளின் உளநலம் குறித்து நாங்கள் அதிகம் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறோம். பிள்ளைகள் தம்மைத்தாமே துன்புறுத்திக்கொண்ட சம்பவங்கள், அதீத மனக்கவலைக்கான அடையாளங்களை காட்டும் சிறார்கள் எவ்வாறு கையாளப்படுகின்றனர் போன்ற விவரங்கள் எமக்குத் தெரிய வேண்டும். என ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்தார் பேராசிரியர் கில்லியன்.

படகில் வரும் சட்டவிரோதக் குடியேறிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தபடியால் குழந்தைகள் சற்று அதிக காலம் தடுத்துவைக்கபட நேர்ந்துள்ளது என்று இவ்விவகாரம் தொடர்பில் விளக்கமளித்த ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மாரிசன் கூறியுள்ளார்.

மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு அதிகாரிகள் முழுமையாக உடன்படுவர் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் குடிவரவு தடுப்புக்காவல் மையங்களில் மொத்தத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் மனித உரிமைகள் ஆணையம் விவரம் அளித்துள்ளது.

இதில் நூற்றுக்கும் அதிகமான பிள்ளைகள் ஆஸ்திரேலியாவுக்கு வெளியில் உள்ள நவுரு தீவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

நவுரு தீவிலுள்ள அகதிகள் தடுப்புக்காவல் மையத்தில் மிக மோசமான சூழ்நிலை இருந்துவருவதாக ஐநாவும் பிற மனித உரிமைக் குழுக்களும் ஏற்கனவே விமர்சித்திருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.