மைக்ரோசாஃப்டின் புதிய தலைவர் நாதெல்ல சத்யா

படத்தின் காப்புரிமை Reuters
Image caption நாதெல்ல சத்யா

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக பில்கேட்ஸ் அறிவித்துள்ளார்.

எனினும் அவர் உருவாக்கிய அந்த மென்பொருள் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசகர் எனும் பதவியை அவர் ஏற்கிறார்.

இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக நாதெல்ல சத்யா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் பிறந்த நாதெல்ல சத்யா, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மூன்றாவது தலைவராக பொறுப்பேற்கிறார். ஸ்டீவ் பால்மர் பதவி விலகியதை அடுத்து நாதெல்ல சத்யா அந்தப் பொறுப்புக்கு தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.

மைக்ரோசாஃப்டில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும்போது, சத்யாவே நிறுவனத்தை தலைமையேற்று நடத்துவதற்கு மிகச்சிறந்தவர் என்று பில் கேட்ஸ் கூறியுள்ளார்.

படத்தின் காப்புரிமை AFP

இதற்கு முன்னர் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தில் க்ளவுட் மற்றும் எண்டர்பிரைஸ் பிரிவுகளின் தலைவராக நாதெல்ல சத்யா இருந்தார்.

இந்த அறிவிப்பை அடுத்து பங்குச் சந்தைகளில் மைக்ரோ சாஃப்ட் பங்குகளின் மதிப்பு அதிகரித்தன.

நாதெல்ல சத்யா இந்தியாவில் 1967 ஆம் ஆண்டு பிறந்தார். மங்களூர் பல்கலைகழகத்தில் மின்பொறியியல் பட்டம் பயின்ற பின்னர் கணினி தொழில்நுட்பம் மற்றும் வர்த்தமேலாண்மை துறையில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.

சன் மைக்ரோ சிஸ்டம்ஸில் முதலில் பணியாற்றிய நாதெல்ல சத்யா, 1992 ஆம் ஆண்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் சேர்ந்தார்.