அரசாங்க பிரதிநிதிகள் பேச வராமல் விட்டதையிட்டு பாக். தாலிபான் ஆத்திரம்

பாகிஸ்தான் தாலிபான்களின் பிரதிநிதிகள் படத்தின் காப்புரிமை Getty
Image caption பாகிஸ்தான் தாலிபான்களின் பிரதிநிதிகள்

பாகிஸ்தானிய தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்த பாகிஸ்தானிய அரசாங்க பிரதிநிதிகள் குழு ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைக்கு வராமல் விட்டதையிட்டு தாலிபான் பேச்சுவார்த்தைக் குழுவின் பிரதிநிதிகள் ஆத்திரம் வெளியிட்டுள்ளனர்.

தாமதப்படுத்தும் உத்தியை அரசாங்கம் கையாளுவதாகக் கூறிய தாலிபான் பிரதிநிதிகள் "இனி என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்" என எச்சரித்தனர்.

தாலிபான் பிரதிநிதிகள் குழு அதற்குள்ளாகவே தலைநகர் இஸ்லாமாபாத்தை விட்டு கிளம்பிவிட்டனர்.

முன்னதாக, தாலிபான்கள் குழுவில் யார் யார் இடம்பெறப்போகிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்தச்சொல்லி அரசாங்கப் பிரதிநிதிகள் கேட்டிருந்தனர்.

ஷரியா சட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தமது இயக்கத்தைச் சேர்ந்தவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் தாலிபான்கள் நிபந்தனை விதிப்பதால், இந்தப் பேச்சுவார்த்தைகள் பெரிதாக வெற்றி பெற முடியாது என்ற விமர்சனங்கள் இருந்துவந்ததாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

இஸ்லாமிய ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என விரும்பும் கடும்போக்கு ஆயுதக்குழுக்களின் தொகுதியாக பாகிஸ்தானிய தாலிபான்கள் அமைந்துள்ளனர்.

அவர்கள் கடந்த ஒரு வருடத்தில் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்களும் பாதுகாப்பு படையினருமாக ஆயிரத்து இருநூறு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.