உடைந்த படகில் தன்னந்தனியாக பதிமூன்று மாதங்கள்

மஜூரோ நகரம் கொண்டுவரப்பட்ட அல்வரங்கா படத்தின் காப்புரிமை BBC World Service
Image caption மஜூரோ நகரம் கொண்டுவரப்பட்ட அல்வரங்கா

பதிமூன்று மாத காலம் நடுக் கடலில் திக்குத்தெரியாமல் தத்தளித்து உயிர் தப்பியுள்ள எல் சால்வடோர்காரர் ஒருவர் சொந்த நாடு திரும்பி குடும்பத்தாரைக் காண விருப்பம் தெரிவித்துள்ளார்.

மெக்ஸிகோவின் மேற்குக் கரையில் பழுதான இவரது படகு கடல் காற்றில் இழுத்துச் செல்லப்பட்டு பத்தாயிரம் கிலோமீட்டர் தூரம் பயணித்து ஆஸ்திரேலியாவுக்கு வடக்கேயுள்ள மார்ஷல் தீவுக் கூட்டத்தின் பவளத் தீவு ஒன்றில் அண்மையில் கரை ஒதுங்கியுள்ளது.

கடல் ஆமைகள், பறவைகள், மீன்கள் போன்றவற்றை பிடித்து பச்சையாக உண்டும், தனது சிறுநீரையே குடித்தும் இவர் உயிர் வாழ்ந்துள்ளார்.

தனது அளவற்ற கடவுள் நம்பிக்கையும், அன்புக்குரியவர்களைக் காண வேண்டும் என்ற ஆவலும், பிடித்த உணவைச் சாப்பிட வேண்டும் என்ற கனவும்தான் கடும் கஷ்டங்களுக்கு இடையிலும் தன்னை உயிர் பிழைக்க வைத்தது என ஹோசே சல்வடோர் அல்வரங்கா கூறுகிறார்.

கடலில் அலைந்த படகு

படத்தின் காப்புரிமை BBC World Service

2012ஆம் ஆண்டு டிசம்பர் மாத பிற்பகுதியில் 37 வயது மீனவரான ஹோஸே சால்வடோர் அல்வரங்கா பதின்ம வயது பையன் சீகுவெல்லை துணைக்கு அழைத்துக்கொண்டு சுறா மீன் பிடிப்பதற்காக தனது 22 அடி கண்ணாடி இழைப் படகில் கிளம்பினார்.

ஆனால் படகு பழுதாகி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டது.

உலகின் மிகப் சமுத்திரமான பசிபிக் கடலின் கிழக்கிலுள்ள மெக்ஸிகோவில் இழுத்துச் செல்லப்பட்ட இந்தப் படகு அச்சமுத்திரத்தின் மேற்கிலுள்ள மார்ஷல் தீவுகள் அருகே கரை ஒதுங்க அல்வரங்கா உயிரோடு காப்பாற்றப்பட்டுள்ளார்.

ஒரு சில மாத காலத்திலேயே தன்னோடு இருந்த பையன் பட்டினியால் உயிரிழந்துவிட்டதாக அவர் கூறுகிறார்.

சூரியனை வைத்து நாட்களை தான் ஆரம்பத்தில் கணக்கிட்டு வந்தாலும், காலம் செல்லச் செல்ல வாரங்கள், மாதங்கள் எல்லாம் நினைவில் இருந்து மங்கிவிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

உணவு, குடிநீருக்கு என்ன செய்தார்?

தனது படகருகே வரும் கடல் ஆமைகளைப் பிடித்து அவற்றின் ரத்தத்தைக் குடித்தும், ஆடும் படகில் எழுந்து நின்று அருகே வரும் கடல் ஆலா பறவைகளைப் பிடித்து அவற்றின் இறைச்சியை பச்சையாக உண்டும், தன்னோடு இருந்த உபகரணங்களை வைத்து மீன்களைப் பிடித்து அவற்றை பச்சையாக உட்கொண்டும் தாம் வாழ்ந்து வாழ்ந்ததாக அல்வரங்கா தெரிவித்துள்ளார்.

மழை பெய்யும் காலத்தில் படகுக் கூட்டுக்குள் தேங்கும் மழைநீரை தாம் குடித்தாலும், மழைபெய்யாத ஒரு மூன்று மாத காலம் தம் சிறுநீரையே குடித்து வாழ்ந்ததுதான் அளவுக்கதிகமான சிரமமாக இருந்தது என்றும் இவர் குறிப்பிட்டார்.

பச்சை இறைச்சியை உட்கொள்ள முடியாமல் தன்னோடு வந்த பையன் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட, மிகுந்த மனக்கஷ்டத்துடன் அவனது உடலை தான் கடலில் போட்டுவிட்டதாக கூறி வருத்தப்பட்டார்.

நம்பிக்கை

பல சமயங்களில் தனக்கு தற்கொலை உணர்வு ஏற்பட்டதாகவும் ஆனாலும் உயிரை மாய்த்துக்கொள்வதிலிருந்த பயம் காரணமாகவும், இறைவன் மீது தனக்கிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாகவும் தான் உயிர்விடவில்லை என்றும் அல்வரங்கா கூறினார்.

இபோன் அடோல் என்ற பவளப் பாறை தீவொன்றில் படகு கரை ஒதுங்க அருகிலிருந்த வீடு ஒன்றை நோக்கிச் சென்று அல்லவரங்கா உதவி கேட்டு குரல் எழுப்பியுள்ளார்.

இளைத்து அழுக்கேறிப்போய் சடைமுடியும் கந்தலாய் கிழிந்த கோமணத்துடனும் நின்ற அல்வரெங்காவுக்கு மார்ஷல் தீவுவாசிகள் இளநீர் கொடுத்து உபசரித்துள்ளனர்.

தனது ஊர் பேர் மறந்துபோகும் அளவுக்கு இவருடைய மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததாக இவரைக் காப்பாற்றியவர்கள் கூறுகின்றனர்.

அல்வரங்காவை சிலநாட்கள் பராமரித்து, உடல்நிலையைத் தேற்றி மார்ஷல் தீவுகளின் தலைநகரமான மஜுரோவுக்கு அவர்கள் அனுப்பி வைத்தனர்.

உறவினர் மகிழ்ச்சி

படத்தின் காப்புரிமை AFP

ஸ்பானிய மொழி மட்டுமே பேசக்கூடிய அல்வரங்கா சொன்ன விவரங்களை மஜூரோவிலுள்ள அமெரிக்க தூதர் விளங்கிக்கொண்டு தகவல் சேகரித்துள்ளார்.

தனது மகன் உயிரோடு இருப்பதை அறிந்து எல் சால்வடோரிலுள்ள அல்வரங்காவின் பெற்றோர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மகன் வீடு திரும்ப வேண்டும் என அவர்கள் ஆசையோடு உள்ளனர்

தனது பெற்றோரையும், தனது ஐந்து வயது மகளையும் காண அல்வரங்காவும் பெரும் ஆவலோடு இருக்கிறார்.

பிலிப்பைன்ஸிலுள்ள மெக்ஸிகோ தூதரகத்தார் அல்வரங்கா ஊர் திரும்புவதற்கான செலவுகளை ஏற்க முன்வந்துள்ளனர்.

எல் சால்வடோர் அதிகாரிகள் மெக்ஸிகோ அரசாங்கத்தைத் தொடர்புகொண்டு, அல்வரங்காவை சொந்த நாட்டுக்கு அழைத்துவரவும் முயற்சிகளைச் செய்துவருகின்றனர்.

2006ஆம் ஆண்டிலும்கூட மெக்ஸிகோவிலிருந்து கிளம்பிய மூன்று மீனவர்கள் 9 மாதம் கடலில் தத்தளித்த நிலையில் மார்ஷல் தீவுகளில் கரை ஒதுங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.