மருந்து சர்ச்சையால் நிறுத்தப்பட்டுள்ள மரண தண்டனை

படத்தின் காப்புரிமை AP

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கொலை குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஒருவரின் தண்டனை நிறைவேற்றத்தை நீதிபதி ஒருவர் நிறுத்தி வைத்துள்ளார்.

கிறிஸ்டோஃபர் செபுல்வாடோவுக்கு நாளை மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்தது. அவரது தண்டனை நிறைவேற்றம் இப்போது 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் ஒஹையோ மாநிலத்தில், புதிய மருந்துக் கலவையை பயன்படுத்தி, ஊசி மூலம் ஒரு மருந்தைச் செலுத்தி ஒரு கைதிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட போது அவர் உடல் துடிதுடிக்க இறந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

படத்தின் காப்புரிமை 1
Image caption ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப் பயன்படுத்தப்படும் அறை

இப்போது அதே மருந்துக் கலவையை இந்த மரண தண்டனைக் கைதிக்கும் கொடுக்கவிருந்த நிலையிலேயே செபுல்வாடோவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மருந்துக் கலவையை பயன்படுத்துவதன் மூலம், கொடூரங்களுக்கு எதிரான நிலைப்பாடுகள், அடிப்படை உரிமைகள் ஆகியவை இந்த அசாதாரணமான தண்டனை நிறைவேற்றத்தில், தமது மனுதாரர் விஷயத்தில் மீறப்படுகிறதா என்பதை ஆராய தமக்கு கூடுதல் அவகாசம் தேவை என்று செபுல்வாடோவின் வழக்கறிஞர்கள் வாதிட்டுள்ளனர்.

மரண தண்டனை நிறைவேற்றப்பட தமது மருந்துகள் பயன்படும் என்றால், அவற்றை அமெரிக்காவுக்கு விற்க, ஐரோப்பிய தயாரிப்பாளர்கள் முன்வராத நிலையில், மாற்று மருந்துகள் மூலம் தண்டனையை நிறைவேற்ற லூசியானாவும் வேறு சில மாநிலங்களுக்கும் வழிமுறைகளை பயன்படுத்தி வருகின்றன.