பத்தாண்டுகளுக்குப் பின் பேருந்து சேவையைக் காணும் கம்போடியர்கள்

படத்தின் காப்புரிமை AFP
Image caption மோட்டார் பைக்குகளை விரும்பும் கம்போடியர்கள்

கம்போடியத் தலைநகர் நாம்பென்னில் கடந்த ஒரு தசாப்தத்தில் முதல் முறையாக பொதுமக்கள் பேருந்துகளில் பயணிக்கிறார்கள்.

நாம்பென் நகரில் 2001ம் ஆண்டில்தான் கடைசியாக பேருந்து சேவைகள் இயங்கின. ஆனால் பொதுமக்கள் அவற்றைப் பயன்படுத்த ஆர்வம் காட்டவில்லை என்பதால் இந்தச் சேவைகள் துவங்கிய ஒரு மாதத்துக்குள் நிறுத்தப்பட்டன.

பொதுவாக நாம் பென்னில் மக்கள் மோட்டார் பைக்குகளையே விரும்புகிறார்கள்.

15 லட்சம் மக்கள் தொகை கொண்ட நாம்பென் நகரில் ஏறக்குறைய அதே எண்ணிக்கையிலான மோட்டார் பைக்குகள் இருக்கின்றன என்று அதிகாரிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மேலும் சுமார் 30,000 கார்களும் சேர்ந்து கொண்டு, நகரில் போக்குவரத்து நெருக்கடியைக் கூட்டுகின்றன.

இப்போது அதிகாரிகள் நகரில் இந்தப் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மீண்டும் புதிய ஒரு பொதுமக்கள் போக்குவரத்து அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

ஒரு மாதகாலம் பரீட்சார்த்தமாக நடக்கவுள்ள இந்தச் சேவையில், நகர மையத்திலிருந்து ஒரே ஒரு தடத்தில் பத்து பேருந்துகள் இயக்கப்படும்.