பிரிட்டிஷ் மாணவர் விசா ஆங்கிலத் தேர்வுகள் இடைநிறுத்தம்

ஈ டி எஸ் நிறுவனம் நடத்தும் டோயிக் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பது தெரியவந்துள்ளது.
Image caption ஈ டி எஸ் நிறுவனம் நடத்தும் டோயிக் தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பது தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு மாணவர்கள் பிரிட்டனில் படிப்பதற்குரிய விசாக்களைப் பெறுவதில் நிறுவன ரீதியான ஏமாற்று வேலைகள் நடப்பதாக பிபிசி நடத்திய விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளதை அடுத்து, விசா பெறுவதற்காக எழுத வேண்டிய ஆங்கிலப் பரிட்சைகளை பிரிட்டிஷ் அரசாங்கம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.

மொழி அறிவு பரிட்சைகளை நடத்துவதில் உலகின் மிகப் பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஈ டி எஸ் நிறுவனம் நடத்திவந்த பரிட்சைகள் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பிரிட்டனில் TOEIC (Test of English for International Communication) எனப்படும் ஆங்கில மொழித் தேர்வில் நடைபெறும் முறைகேடுகளை பிபிசியின் பனோரமா நிகழ்ச்சியைச் சேர்ந்த புலனாய்வு ஊடகவியலாளர்கள் ரகசியமாக வீடியோ படம் எடுத்து வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

தனியாரால் நடத்தப்பட்டாலும் அரசாங்க அங்கீகாரம் பெற்றுள்ள இத்தேர்வுகளை எழுதுவதில் ஏமாற்று வேலைகள் நடப்பதை இந்த வீடியோ படங்கள் காட்டுகின்றன.

தேர்வு அறையில் கண்காணிப்பாளரே அனைத்து கேள்விக்குமான சரியான விடைகளை தேர்வெழுதுவோருக்கு கூறுவது, தேர்வெழுத வரும் மாணவர்களை அருகில் நிற்கவைத்துக்கொண்டு அவருக்கு பதிலாக வேறு ஒருவர் தேர்வை எழுதுவது போன்ற ஏமாற்று வேலைகள் நடப்பதை பிபிசி எடுத்த ரகசிய வீடியோக்கள் காட்டுகின்றன.

பிரிட்டனுக்குள் வந்து படிப்பதற்குரிய மாணவர் விசாக்களை வெளிநாட்டவர் ஏமாற்றிப் பெறுவதற்கு நிறைய முகவர்கள் உதவுகிறார்கள் என்று கேள்விப்பட்டு அவர்களை பின்தொடர்ந்து பனோரமா ஆய்வாளர்கள் ரகசிய வீடியோவை பதிவுசெய்துள்ளனர்.

பிபிசி காட்டுகின்ற ஆதாரங்களைப் பார்க்கும்போது அதிர்ச்சி ஏற்படுகிறது என பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் தெரெஸா மே கூறுகிறார்.

முறைகேடுகளை வெளிச்சம் போட்டு காட்டியமைக்காக பிபிசிக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

மாணவர் விசா நீட்டிப்புக்குத் தேவையான ஆங்கில மொழித் தேர்வுகள் நடத்தப்படுவதை இடைநிறுத்தி வைப்பதாக பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்துள்ளது.

தேர்வுகளை நடத்தி வரும் ஈ டி எஸ் நிறுவனமோ முறைகேடுகளுக்கும் தமக்கும் தொடர்பு இல்லை என்று கூறுகிறது.

தேர்வுக்கு வரும் கண்காணிப்பு அதிகாரிகளை தாம் நியமிக்கவில்லை என அது தெரிவிக்கிறது.

முறைகேடுகளையும் ஏமாற்று வேலைகளையும் கண்டறிந்து தடுக்க தம்மாலான அனைத்து முயற்சிகளையும் தாம் மேற்கொண்டுவருவதாகவும் அது தெரிவிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வெளியில் இருந்து வரும் ஒரு லட்சம் மாணவர்கள் ஐக்கிய ராஜ்ஜியத்தில் தாம் தங்குவதற்குரிய அனுமதியை தாம் மாணவர்கள் என்று காட்டி புதுப்பித்துக்கொள்கிறார்கள்.

படிப்பதற்காக என்றில்லாமல் வேலைபார்ப்பதற்காக இந்த நாட்டில் தொடர்ந்து தங்கியிருக்க விரும்பும் வெளிநாட்டினரும் மாணவர் விசாக்களை ஏமாற்றிப் பெற்று பிரிட்டனில் தங்கிவிடுவதுண்டு.

பிரிட்டனில் தங்குவதற்குரிய விசா பெறுவதற்கு விண்ணப்பதாரரின் வங்கிக்கணக்கில் குறிப்பிட்ட அளவுக்கு நிதிக் கையிருப்பு வேண்டும் என்ற நிபந்தனை இருக்கிறது.

ஒருவருடைய வங்கிக்கணக்கில் அந்த அளவு பணம் இருப்பதாக பொய்யாக சான்றிதழ் பெறுகின்ற ஒரு சேவையையும் முகவர்கள் செய்து தருகிறார்கள் என பனோரமா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.