கட்டாரில் தொழிலாளர் நலன் காக்க புதிய நடவடிக்கை

படத்தின் காப்புரிமை AFP
Image caption கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டவர்

கட்டாரில் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு நடைபெற்வுள்ள உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்கான ஏற்பாட்டுக் குழுவினர் தொழிலாளர்களின் உரிமைகள் குறித்த ஒரு பிரகடனத்தை வெளியிட்டுள்ளனர்.

அந்நாட்டில் தொழிலாளர்கள் நடத்தப்படும் விதம் தொடர்பிலான நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா வலியுறுத்திய பிறகே இந்த பிரகடனம் வந்துள்ளது.

கடந்த ஆண்டில் மட்டும் கட்டாரில், உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளுக்கான கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த 185 நேபாள நாட்டுத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு அங்கமான சர்வதேச தொழிலாளர் நல அமைப்பான ஐ எல் ஓ வுடன் இணைந்து, தொழிலாளர்களின் நலன்களை காக்கும் வகையிலான இந்தப் பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இவர்கள் நலன்கள் மேம்படுமா?

இந்தப் பிரகடனத்தின்படி, உலக்க் கோப்பைப் போட்டிகளுக்கான கட்டிடப் பணிகளில் ஈடுபட்டுள்ள ஒப்பந்ததாரர்கள், மேம்பட்ட செயல்பாட்டு நடைமுறைகளை கடைபிடிக்கவும், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் வழி ஏற்பட்டுள்ளது.

ஆனால் இந்தப் புதிய பிரகடனத்தில் எதிர்பார்த்த அளவுக்கு தொழிலாளர்களின் நலன்கள் பாதுகாக்கப்படவில்லை என்று சர்வதேச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை AFP
Image caption இப்படியான அரங்குகளை உருவாக்கும் தொழிலாளர்களின் உரிமைகள் இப்போது பாதுகாக்கப்படும்

புதிதாக வெளியிடபட்டுள்ள பிரகடனத்தின்படி கட்டாரில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தொழிலாளர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

அதேபோல் வேலை செய்யும் இடத்தில் அவர்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டும் என்பது உட்பட பல அம்சங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.

தொழிலாளர்கள் தமது குறைகளை தெரிவிப்பதற்கும் அவசர உதவி கோரியும் விண்ணப்பிக்கவும் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்படும்.