சீனாவில் தொட்டில் குழந்தை திட்டம்

  • 16 பிப்ரவரி 2014
தாயுடன் சீனக் குழந்தை ஒன்று படத்தின் காப்புரிமை AFP

சீனாவில் பெற்றெடுத்த பிள்ளையை கைவிட விரும்பும் பெற்றோர்கள் அவற்றை பாதுகாப்பான இடத்தில் விட்டுச் செல்வதற்கான 25 நிலையங்களை நாட்டின் பல்வேறு ஊர்களிலுமாக சீன அரசாங்கம் அமைத்துள்ளது.

இவ்வகையான இடங்களை அரசாங்கம் அமைத்துக்கொடுத்தால் பெற்ற பிள்ளையை கைவிட விரும்பும் பெற்றோருக்கு ஊக்கமளிப்பதாக ஆகிவிடும் என்று விமர்சனங்கள் நிலவுகின்ற போதிலும் பிள்ளையை கைவிடுவதற்கான இவ்வகையான இடங்களை மேலும் பல இடங்களில் அமைப்பதே அரசாங்கத்தின் திட்டம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

அரசாங்கம் அமைத்துள்ள நிலையங்களில் குழந்தையை வெதுவெதுப்பாக வைத்திருக்கக்கூடிய (இன்குபேட்டர்) தொட்டில் இருக்கும், தவிர ஒரு குழந்தை அதில் போடப்பட்டால், பெற்றோர் வெளியேறிய பின்னர் காலம் தாழ்த்தி ஒலிக்கின்ற மணியும் உண்டு.

எங்கோ ஒரு இடத்தில் குழந்தையைக் கைவிட்டு பின்னர் அது கண்டெடுக்கப்படும்போது பல நேரங்களில் அக்குழந்தைகள் இறந்துவிடுகின்றன. இவ்வகையான நிலையங்களில் குழந்தையைக் கைவிடும்போது அக்குழந்தை பிழைப்பதற்கான வாய்ப்பு பெருமளவு அதிகரிக்கிறது.

பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளில் பெரும்பான்மையானவை ஒன்றில் குறைபாடுள்ள குழந்தைகள் அல்லது கடுமையாக நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுமாக அமைந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.