எகிப்து: முன்னாள் அதிபர் மீதான விசாரணை ஒத்திவைப்பு

அடைத்துவைக்கப்பட்டுள்ள முகமது மொர்ஸி படத்தின் காப்புரிமை AP
Image caption அடைத்துவைக்கப்பட்டுள்ள முகமது மொர்ஸி

எகிப்தில் அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட முகமது மொர்ஸி மீதான புதிய வழக்கு விசாரணையை கெய்ரோ நீதிமன்றம் ஒன்று ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மொர்ஸி மற்றும் இதர நபர்களை சத்தம் வெளியில் கேட்காத கண்ணாடி அறையில் அடைத்து வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மொர்ஸியின் வக்கீல்கள் வெளிநடப்பு செய்ததை தொடர்ந்து விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.

இவ்வழக்கு வரும் ஞாயிறன்று மீண்டும் விசாரணைக்கு வருகின்றது.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா மற்றும் இரானின் புரட்சிக்கர படையினரோடு இணைந்து சதித்தீட்டம் தீட்டியதாக முன்னாள் அதிபர் முகமது முர்ஸி மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குண்டுவெடிப்பு

இதற்கிடையே எகிப்தின் சினாய் வளைகுடாவில் சுற்றுலா பேருந்து ஒன்றில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் மூன்று தென் கொரிய சுற்றுலா பயணிகள் உட்பட நால்வர் பலியாகியுள்ளனர்.

இச்சம்பவத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.