சௌதி பத்திரிக்கையின் முதல் பெண் ஆசிரியர் நியமனம்

Image caption ஆண் பெண் சமத்துவப் பிரச்சினை கொண்ட சௌதி அரேபியா ( பழைய படம்)

சௌதி அரேபியாவில் ஒரு பத்திரிக்கையின் முதல் பெண் ஆசிரியராக, சௌதி பத்திரிகையாளர், சொமய்யா ஜாபர்த்தி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

சௌதி அரேபியாவின் ஆங்கிலப் பத்திரிக்கையான, சௌதி கெஜட், அதன் தற்போதைய ஆசிரியரான, காலெத் அல்மயீனாவுக்கு அடுத்தபடியாக, ஜாபர்த்தி பதவி ஏற்பார் என்று தனது இணைய தளத்தில் அறிவித்திருக்கிறது.

ஜாபர்த்தி இந்தப் பதவியைத் தனது திறமையால் பெற்றிருக்கிறார் , அவர் ஒரு மன உறுதியும், அர்ப்பணிப்பு உணர்வும் கொண்ட பத்திரிகையாளர் என்று அவரைப் பற்றி தற்போதைய ஆசிரியர் காலெத் அல்மயீனா வர்ணித்திருக்கிறார்.

பெண்கள் இது போன்ற தொழில் இடங்களில் வளர்வதற்கு இருந்த ஒரு "கண்ணாடிக் கூரை"யில் ( உச்ச வரம்பு) ஒரு விரிசல் ஏற்படுத்தப்பட்டுவிட்டது, அது உடைக்கப்பட்டுவிட்டது என்ற் ஜாபர்த்தி கூறியிருக்கிறார்.

சௌதி அரேபியாவில், பெண்கள் ஆண்களுக்கு சரி சமமாக வேலை செய்வதை பல அதி தீவிர பழமைவாத முஸ்லீம் மதகுருமார்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்.