ஆஸ்திரேலியக் குடிவரவு மையத்தில் கலவரம்: ஒருவர் பலி

படத்தின் காப்புரிமை AFP
Image caption மானுஸ் தீவில் அமைந்திருக்கும் ஆஸ்திரேலியக் குடிவரவுத் தடுப்புக் காவல் மையம்

பாப்யுவா நியூகினி நாட்டில் இருக்கும் ஆஸ்திரேலியக் குடிவரவுத் தடுப்புக் காவல் மையம் ஒன்றில் இரண்டாவது இரவாக நடந்த கலவரங்களில், தஞ்சம் கோரி ஒருவர் கொல்லபட்டார்.

மேலும் 72 பேர் காயமடைந்திருக்கிறார்கள்.

மானுஸ் தீவில் அமைந்திருக்கும் இந்தத் தடுப்புக்காவல் மையத்திலிருந்து பல தஞ்சம் கோரிகள் கொஞ்ச நேரம் தப்பிவிட்டனர் என்று ஞாயிற்றுக்கிழமை வந்த தகவல்களைத் தொடர்ந்து இந்தக் கலவரங்கள் வெடித்தன.

இந்த மரணத்தை ஒரு "துன்பகரமான சம்பவம்" என்று ஆஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்காட் மாரிசன் வர்ணித்தார்.

ஆனால் ஆஸ்திரேலியாவுக்குக் குடியேற முயல்வோர்களை இது போன்ற வெளிநாட்டுத் தீவுகளில் அமைந்திருக்கும் முகாம்களில் தடுத்து வைத்து , அவர்களது கோரிக்கைகளைப் பரிசீலிக்கும் ஆஸ்திரேலியாவின் தற்போதைய கொள்கையில் எந்த மாற்றமும் இருக்காது என்றும் அவர் கூறினார்.

அகதிகள் உரிமைகளுக்காகச் செயல்படும் தன்னார்வக் குழுக்கள் இந்த மானுஸ் தீவில் இருக்கும் தடுப்புக்காவல் மையம் மூடப்படவேண்டும் என்று கோரியுள்ளன