யுக்ரெய்னின் அரசியல் எதிர்காலம் பற்றி நாடாளுமன்றம் ஆராய்கிறது

படத்தின் காப்புரிமை AFP
Image caption யுக்ரெய்ன் நாடாளுமன்றம் அதிபரை பதவி நீக்குவதாக அறிவித்துவிட்டது

யுக்ரெய்னின் அரசியல் எதிர்காலம் பற்றி நாடாளுமன்றம் கூடி ஆராய்ந்துவருகிறது.

அதிபர் விக்டர் யனுகோவிச்- ஐ பதவியிலிருந்து நீக்குவதற்காக நேற்று சனிக்கிழமை நாடாளுமன்றம் வாக்களித்தது.

பெரும் எதிர்ப்பு போராட்டங்களின் மத்தியிலேயே அதிபரை பதவி நீக்கும் தீர்மானத்திற்கு நாடாளுமன்றம் வந்தது.

நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஒலெக்ஸாண்டர் துர்ச்சினோவ்-ஐ இடைக்கால அதிபராக நியமிக்கவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்தனர்.

வரும் செவ்வாய்க்கிழமைக்கு முன்னதாக, தேசிய ஐக்கிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு இணங்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மோசமான குற்றச்செயல்களைப் புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் தலைமை அதிகாரிகளுக்கு எதிராக கைது ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் யனுகோவிச் தலைநகர் கியேவ்- இலிருந்து வெளியேறிவிட்டார்.

அதற்கு முன்னதாக, ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் நடந்த மோதல்களில் 80க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.

அரச எதிர்ப்பு போராட்டங்களுக்கு முக்கிய மைய இடமாக உள்ள சுதந்திர சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்தும் குவிந்த வண்ணமுள்ளனர்.