யுக்ரெய்னில் விசேட அதிரடி பொலிஸ் படை கலைப்பு

கலவரங்களின்போது நடந்த உயிரிழப்புகளுக்கு விசேட அதிரடிப் படையே காரணம் என்று கூறப்படுகிறது. படத்தின் காப்புரிமை Reuters
Image caption கலவரங்களின்போது நடந்த உயிரிழப்புகளுக்கு விசேட அதிரடிப் படையே காரணம் என்று கூறப்படுகிறது.

யுக்ரெய்னில் நாட்டின் நிர்வாகத்துக்கு பொறுப்பேற்றுள்ள இடைக்கால அதிகாரிகள் அந்நாட்டின் விசேட கலவரக் கட்டுப்பாட்டு பொலிஸ் படையைக் கலைப்பதாகக் கூறுகின்றனர்.

தலைநகர் கியெவ்வில் சென்ற வாரம் நடந்த வீதிக் கலவரங்களில் பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு இந்த பொலிஸ் படையே காரணம் என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

வீதிக் கலவரங்களில் கிட்டத்தட்ட நூறு பேர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்குட் என்று அழைக்கப்படுகின்ற இந்த விசேட பொலிஸ் பிரிவு இனிமேல் இல்லை என்று தற்காலிக உள்துறை அமைச்சர் ஆர்சென் வகொவ் அறிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தில் யார் யார் பங்கெடுக்கப்போகிறார்கள் என்று தீர்மானிக்க அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்ததை விட அதிக காலம் பிடிக்கிறது என்றும், அமைச்சரவை உருவாக்கம் தொடர்பான வாக்கெடுப்பை வரும் வியாழக்கிழமைவரை நாடாளுமன்றம் ஒத்திவைத்துள்ளது என்றும் கியெவ்வில் உள்ள பிபிசி முகவர் கூறுகிறார்.

அந்த வாக்கெடுப்புக்கு முன்பாக புதனன்று பின்னேரம் புதிய அமைச்சர்களாக முன்மொழியப்பட இருப்பவர்கள் மக்களின் ஒப்புதலைப் பெறுவதற்காக கியெவ்வின் சுதந்திர சதுக்கத்தில் கூட்டத்தினர் முன்பு தோன்றவிருக்கின்றனர்.