போர் ஆயுதமாக பாலியல் வல்லுறவு: தடுக்க உச்சி மாநாடு

படத்தின் காப்புரிமை Reuters
Image caption "போர்க் கருவியாக பாலியல் வன்முறை" -- தடுப்பது குறித்து லண்டனில் மாநாடு

பாலியல் வல்லுறவை போர் ஆயுதமாகப் பயன்படுத்துவதை எப்படித் தடுப்பது என்பது குறித்து விவாதிக்க உலகத் தலைவர்களின் உச்சி மாநாடு ஒன்று லண்டனில் வரும் ஜூன் மாதத்தில் கூட்டப்படும் என்று பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் அறிவித்திருக்கிறார்.

இந்த மாநாட்டில் 140 உலக நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் , ராணுவ , போலிஸ் மற்றும் சட்ட வல்லுநர்கள் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்படும் என்று ஹேக் கூறினார்.

இந்த மாநாடு மோதல் நடக்கும் பகுதிகளில் பாலியல் வன்முறை குறித்து கவனம் செலுத்தும் மிகப்பெரும் ஒரு கூட்டமாக இருக்கும் என்று அவர் கூறினார்.

பாலியல் வன்முறைக்கு எதிராக வழிகாட்டு நெறிமுறைகளை வகுப்பது இந்த மாநாட்டின் நோக்கம் என்றும், இந்த நெறிமுறைகள் சர்வதேச அமைதி நடவடிக்கைகள் உட்பட, ராணுவத்தினருக்கு வழங்கப்படும் பயிற்சி மற்றும் சித்தாந்தத்தில் பயிற்றுவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

பாலியல் வன்முறைகள் நடப்பதை ஒழிப்பதை உலக நாடுகள் நீண்ட காலமாகவே தவிர்த்து வந்திருக்கின்றன என்றும் அவர் வாஷிங்டனில் கூறினார்.