ஆப்பிரிக்காவுக்கு மின்சாரம்: அமெரிக்க உதவித் திட்டத்தில் முன்னேற்றம்

அமெரிக்க அதிபர் ஒபாமா படத்தின் காப்புரிமை AFP
Image caption அமெரிக்க அதிபர் ஒபாமா

ஆப்பிரிக்காவில் சஹாரா பாலைவனத்துக்கு தெற்காக அமைந்துள்ள நாடுகளில் வாழுவோரில் மின்சார வசதி இல்லாமல் கஷ்டப்படுகின்றவர்களில் சுமார் 5 கோடிப் பேருக்கும் மின் வசதி செய்துதரும் திட்டம் ஒன்றுக்கு அமெரிக்க நாடாளுமன்றக் குழு ஒன்று ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் ஆப்பிரிக்காவுக்காக முன்னெடுக்கும் அடுத்த முக்கியமான உதவித் திட்டத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது என்று இதனைக் கூறலாம்.

வெளிவிவகாரம் தொடர்பான நாடாளுமன்றக் குழுவினால் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின்படி, 2020ஆம் ஆண்டுக்குள் இந்த பிராந்தியத்தில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட மின்நிலையங்கள் இருபதை அமைப்பது என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் மூலம் குறைந்தது ஐந்து கோடிப் பேர் மின்வசதியைப் பெறுவார்கள்.

கடந்த ஜூன் மாதம் ஒபாமா ஆப்பிரிக்கா சென்றபோது இத்திட்டத்தை அவர் அறிவித்திருந்தார்.

நாடாளுமன்றத்தின் மக்கள் அவை மற்றும் பிரதிநிதிகள் அவை இத்திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டியுள்ளது.

ஆனால் வெளிவிவகார குழுவின் வாக்குகளை வைத்துப் பார்க்கையில் இந்த இரண்டு அவைகளிலும் இத்திட்டத்துக்கு ஒப்புதல் கிடைக்கும் என்றே தெரிகிறது.