யுக்ரெய்னில் ரஷ்ய துருப்புகளை ஈடுபடுத்த நாடாளுமன்ற ஒப்புதல் கோரியுள்ளார் அதிபர் புடின்

கிரைமீயாவின் நாடாளுமன்றம் ஆயுததாரிகளால் முற்றுகையிடப்பட்டது படத்தின் காப்புரிமை Reuters
Image caption கிரைமீயாவின் நாடாளுமன்றம் ஆயுததாரிகளால் முற்றுகையிடப்பட்டது

யுக்ரெய்னில் தமது படைகளை பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தை ரஷ்ய அதிபர் புடின் நாடாளுமன்ற மேலவையிடம் கோரியுள்ளார்.

யுக்ரெய்னின் கிரைமீயா பிராந்தியத்துடைய புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள செர்கெய் அக்சியொனொவ், பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுவதற்கு எனக் குறிப்பிட்டு, அதற்கு ரஷ்ய அதிபர் புடின் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டதை அடுத்து புடினின் நடவடிக்கை வந்துள்ளது

தன்னாட்சி அதிகாரம் கொண்ட பிராந்தியமான கிரைமீயாவின் நாடாளுமன்றத்தை ரஷ்ய ஆதரவு ஆயுததாரிகள் முற்றுகையிட்டதன் பின்னர் நியமிக்கப்பட்டுள்ள அக்சியொனொவ்வின் வேண்டுகோளை தாங்கள் சட்டை செய்துவிட மாட்டோம் என ரஷ்ய அரசு கூறியிருந்தது.

கிரைமீயாவுக்கு தனது படையினர் ஆறாயிரம் பேரை ரஷ்யா அனுப்பியுள்ளது என யுக்ரெய்ன் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் கிரைமீயாவின் உள்துறை அமைச்சக இடங்களை முற்றுகையிடுவதற்காக சனிக்கிழமை முன்னேரத்தில் யுக்ரெய்ன் தலைநகர் கியெவ்விலிருந்து ஆயுததாரிகள் அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சு குற்றம்சாட்டியுள்ளது.

ரஷ்ய படையினரும், உள்ளூர் ஆதரவாளர்களும் யுக்ரெய்னிய கடலோரக் காவற்படையின் தளத்தில் தற்போது இணைந்து ரோந்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கு ஏற்கனவே நிலைகொண்டுள்ள ரஷ்யாவின் கடற்படையின் கருங்கடற் பிரிவு, இண்டர்ஃபேக்ஸ் செய்திச் சேவையிடம் கூறியுள்ளது.

கிரைமீயா பதற்றால் சர்வதேச சமூகம் கவலை

யுக்ரெய்னில் காணப்படும் ஸ்திரமின்மையும், ரஷ்யத் தலையீடு குறித்த குற்றச்சாட்டும், இராஜதந்திர ரீதியிலான பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளன.

கிரைமியாவில் ரஷ்ய ஆதரவு பொம்மை ஆட்சி ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் ரஷ்யாவின் இராணுவத் தலையீடு வெளிப்படையாகத் தெரிவதாக ஸ்வீடன் வெளியுறவு அமைச்சர் Carl Bildt கூறியுள்ளார்.

அந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் வில்லியம் ஹேக், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சேர்ஜி லாவ்ரோவைக் கேட்டுள்ளார்.

யுக்ரேனிய தலைநகர் கியெவ்வுக்கு ஞாயிறன்று ஹேக் விஜயம் செய்யவுள்ளார்.

கிரைமியாவில் உள்ள நிலைமைகள் பயங்கரமானவை என்று ஜேர்மனிய வெளியுறவு அமைச்சர் விபரித்துள்ளார்.