எவரெஸ்ட்டில் ஏறுவோர் 8 கிலோ குப்பைகளை அள்ளிவர வேண்டும்

படத்தின் காப்புரிமை Getty
Image caption மலைச் சிகரங்களில் கழிவுப் பொருட்கள் குவிந்துவருகின்றமை தொடர்பில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்

எவரெஸ்ட் மலைச்சிகரத்துக்கு இம்முறை வசந்த காலத்தில் செல்லும் மலையேறிகளும் அவர்களின் ஆதரவு அணியினரும் திரும்பிவரும்போது, ஆளாளுக்கு குறைந்தது 8 கிலோகிராம் குப்பைகளை அள்ளிவருவார்கள் என்று நேபாள அரசாங்கம் கூறியுள்ளது.

மௌன்ட் எவரெஸ்ட் பேஸ் கேம்ப்- என்ற 5,300 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ள தளத்துக்கு மேல் செல்லும் எல்லோருக்கும் இந்தப் புதிய சட்டவிதி பொருந்தும் என்று அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

உலகின் உயரமான மலைச்சிகரமான எவரெஸ்டின் மீதும் அதனைச் சூழவும் கழிவுப் பொருட்கள் குவிந்துவருகின்றமை தொடர்பான கவலைகளை அடுத்தே அரசு இந்தப் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளதாக காத்மண்டுவில் உள்ள பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.

அதிகளவான வெளிநாட்டு மலையேறிகளை ஈர்ப்பதற்காக எவரெஸ்ட் மற்றும் ஏனைய இமயமலைச் சிகரங்களுக்குச் செல்லும் தனிப்பட்ட மலையேறிகளுக்கான கட்டணத்தை கடந்த மாதம் நேபாளம் ரத்துசெய்தது.

இதனால், மலையேறிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் மலைகளில் குப்பைகள் குவிந்துவிடும் என்ற கவலைகளும் அதிகரித்தன.

மலையுச்சிகளில் குவிந்துள்ள கழிவுப் பொருட்களை அகற்றுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் அவசியம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் மலையேறிகளின் குழுக்களும் நீண்டகாலமாக வலியுறுத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.