யுக்ரெய்ன் நெருக்கடி: கிரிமியா ரஷ்யாவுடன் இணைய முடிவு

யுக்ரெய்ன் பற்றி விவாதிக்கவுள்ள ஐரோப்பியத் தலைவர்கள்
Image caption யுக்ரெய்ன் பற்றி ஐரோப்பியத் தலைவர்கள் விவாதிக்கவுள்ளனர்.

ரஷ்ய சமஷ்டிக் கூட்டமைப்புடன் ஓர் அங்கமாக இணைந்துகொள்வதற்காக யுக்ரெயினின் கிரிமியா பிராந்திய சட்டமன்றம் வாக்களித்துள்ளது.

கிரிமியா சட்டமன்றத்தின் இந்த முடிவு பற்றி கிரிமியா மக்களின் கருத்தை அறிந்துகொள்வதற்கான வாக்கெடுப்பும் மார்ச் 16-ம் திகதி நடத்தப்படவுள்ளது.

ஆனால் அப்படி மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது என்று யுக்ரெயின் இடைக்கால அரசாங்கம் அறிவித்துள்ளது.

யுக்ரெயினில் ரஷ்யாவுக்கு ஆதரவான முன்னாள் அதிபர் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலும் ரஷ்ய இனத்தவர்கள் வாழும் கிரிமியா பிராந்தியமே முக்கிய பிரச்சனைக்குரிய விவகாரமாக மாறியுள்ளது.

இதற்கிடையே, யுக்ரெய்னில் எழுந்துள்ள நெருக்கடி பற்றி விவாதிப்பதற்கான அவசர உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பிரஸ்ஸல்ஸ் நகரில் கூடிவருகின்றனர்.

பேச்சுவார்த்தைகளுக்காக பிரஸ்ஸல்ஸ் வந்த யுக்ரெய்னின் புதிய பிரதமர் அர்செனியி யத்சென்யுக், நிலைமையை ஸ்திரப்படுத்தும் வழிவகைகள் பற்றிய நிஜமான கலந்துரையாடல்களுக்கு ரஷ்யா தயாராக இருக்கிறதா என்பதைப் பொருத்தே இப்பேச்சுக்களில் தீர்வு எதுவும் ஏற்படும் என்று கூறினார்.

க்ரைமீயாவில் ரஷ்யா இராணுவ ரீதியாகத் தலையிட்டுள்ள விவகாரத்துக்கு எவ்விதம் பதில் தருவது என்பதில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் இடையே கருத்து வேற்றுமை தென்படுகிறது.

கடுமையான நிலைபாட்டை எடுக்க வேண்டும் என சில கிழக்கு ஐரோப்பிய நாடுகள் விரும்புகின்றன.

ஆனால் ரஷ்யாவுடன் ஜெர்மனி கொண்டுள்ள மிகப்பெரிய பொருளாதார உறவுகள் பாதிக்கப்படும் என்ற அச்சத்தால் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை கொண்டுவரக்கூடாது என உள்நாட்டளவிலான கடுமையான அழுத்தங்களை ஜெர்மானிய அரசு எதிர்கொண்டுவருகிறது.

புதனன்று ரஷ்யாவுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் பாரிஸில் நடந்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் எதுவும் தோன்றியிருக்கவில்லை.