ஆணோடு பாலுறவு: அன்வர் இப்ராஹிம் விடுவிக்கப்பட்ட தீர்ப்பு ரத்து

தனது அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்கச் செய்வதற்காக சுமத்தப்படும் வீண் பழி எனஅன்வர் இப்ராஹிம் வாதிடுகிறார். படத்தின் காப்புரிமை AFP
Image caption தனது அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்கச் செய்வதற்காக சுமத்தப்படும் வீண் பழி எனஅன்வர் இப்ராஹிம் வாதிடுகிறார்.

மலேசியாவின் முன்னாள் பிரதமரும் இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான அன்வர் இப்ராஹிம் ஆணோடு பாலுறவு கொண்டார் என்பதாக குற்றம்சாட்டப்பட்டிருந்த வழக்கில் அவரை விடுவித்திருந்த ஒரு நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து அந்நாட்டின் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அன்வர் இப்ராஹிம் மீது அக்குற்றச்சாட்டை முன்னெடுப்பதைக் கைவிடுவது என முந்தைய அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எடுத்திருந்த முடிவு தவறு என வாதிட்டு இந்நாள் அரசாங்கம் செய்திருந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

தன்னுடைய ஆண் உதவியாளருடன் அன்வர் இப்ராஹிம் ஆசனவாய்ப் புணர்ச்சியில் ஈடுபட்டார் என மேன்முறையீட்டு நீதிமன்றம் முடிவு தெரிவித்துள்ளது. அச்செயல் மலேசிய சட்டங்களின் கீழ் கிரிமினல் குற்றமாகும்.

அரசியல் உள்நோக்கங்களுக்காக தன் மீது அக்குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது என்றும், அவருடைய அரசியல் வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் அவை முன்னெடுக்கப்படுவதாகவும் அன்வரின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து மலேசியாவின் உச்சநீதிமன்றத்தில் அன்வர் இப்ராஹிமின் சட்டத்தரணிகள் மேல்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.