காணாமல்போன விமானம்: தேடலில் இதுவரை பலன் இல்லை

பயணிகளின் உறவினர்கள் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் ஆளாகியுள்ளனர்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு,

பயணிகளின் உறவினர்கள் அதிர்ச்சிக்கும் சோகத்துக்கும் ஆளாகியுள்ளனர்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்கு பறந்துகொண்டிருந்த வேளையில் காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றபோதிலும், அவ்விமானத்தின் அடையாளம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

பயணிகள் சிப்பந்திகளாக 239 பேருடன் நடுவானில் காணாமல்போன எம்.ஹெச்.370 ரக விமானத்தை தேடிக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகளில் பல்வேறு நாடுகளும் ஈடுபட்டுள்ளன.

மலேஷியாவுக்கு வியட்நாமுக்குமான இடைவெளியின் பாதியில்,பெரிய கடற்பரப்புக்கு மேலே பறந்துகொண்டிருக்கையில் இந்த மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தொடர்பறுந்துபோனதால், அப்பகுதி கடலில் விமானம் விழுந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.

வெள்ளிக்கிழமை மாலை உள்ளூர் நேரப்படி 6:40க்கு காணாமல்போன இந்த விமானத்தின் எச்சங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் ஹெலிகாப்டர்களும் கப்பல்களும் முதலில் ஈடுபடுத்தப்பட்டிருந்தன. ஆனால் அவற்றால் எதனையுமே கண்டுபிடிக்க முடியவில்லை.

விமான எச்சங்களைத் தேடும் சர்வதேச முயற்சியில் தற்சமயம் அமெரிக்க கடற்படையும் இதில் உதவச் சம்மதித்துள்ளதாக மலேசியப் பிரதமர் நஜீப் ரஸாக் கூறினார்.

எண்ணெய்த் திட்டுகள்

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு,

விமானம் காணாமல்போன இடத்தைக் காட்டும் வரைபடம்

இதனிடையே வியட்நாமுக்கு தெற்காக கடல் பரப்பில் இரண்டு எண்ணெய் திட்டுக்கள் காணப்படுவதாகவும் சுமார் 15 கிலோமீட்டர் நீளத்துக்கு ஒன்றுக்கொன்று சமாந்திரமாக இந்த எண்ணெய்த் திட்டுக்கள் அமைந்திருப்பது அவை விமானத்திலிருந்து வந்திருக்க கூடியவை என்று குறிப்புணர்த்துவதாகவும் வியட்நாம் கூறியுள்ளது.

ஆனாலும் இந்த எண்ணெய்த் திட்டுக்கள் இந்த விமானத்தினால் ஏற்படுத்தப்பட்டவைதானா என்பது இன்னும் உறுதிசெய்யபடவில்லை.

இதனிடையே இந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் உறவுகளுக்கு தகவல் கொடுக்கின்ற பணியும் ஒரு புறத்திலே நடந்துவருகிறது.

பெரும்பாலான பயணிகளின் உறவுகளிடத்தில் விமான சேவை நிறுவன ஊழியர்கள் பேசி தகவல் கொடுத்துள்ளார்கள் என்று மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி அகமது ஜௌஹாரி யஹ்யா தெரிவித்துள்ளார்.

சென்னைப் பெண்

காணாமல்போயுள்ள இந்த போயிங் 777 ரக விமானத்தில் 14 நாட்டுப் பிரஜைகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

152 சீனப் பிரஜைகள், 38 மலேசியர்கள், 12 இந்தோனேசியர்கள் உட்பட 5 இந்தியர்களும் இந்த விமானத்தில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியர்கள் 5பேரில் சென்னையைச் சேர்ந்த சந்திரிகா ஷர்மா என்ற பெண்மணியும் அடங்குவார்.

மீனவத் தொழிலாளர்களின் நலனுக்காக சர்வதேச அளவில் பணியாற்றிவருகின்ற ICSF என்ற அமைப்பை சேர்ந்தவர் சந்திரிகா ஷர்மா ஆவார்.