துப்புரவுப் பணியாளர் வேலைநிறுத்தம்: ரியோவில் எங்கு பார்த்தலும் குப்பை

கார்னிவலில் சேர்ந்த குப்பைகள் இன்னும் அகற்றப்படவில்லை. படத்தின் காப்புரிமை AFP
Image caption கார்னிவலில் சேர்ந்த குப்பைகள் இன்னும் அகற்றப்படவில்லை.

பிரஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் அண்மையில் நடந்த நான்கு நாள் கார்னிவல் கொண்டாட்டங்களில் சேர்ந்த குப்பைக்கூலங்கள் இன்னும் அந்த நகரில் சேர்ந்து கிடக்கின்றன.

துப்புரவுப் பணியாளர்கள் கடந்த ஒரு வாரமாக செய்துவரும் வேலைநிறுத்தம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

ஊதிய உயர்வும், மேம்பட்ட பணிச் சூழலும் வேண்டும் என்று கோரி வருகின்ற அவர்கள், வெள்ளியன்று நகர மேயரின் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.

ரியோவின் புகழ்பெற்ற கடற்கரைகளான கோப்பாகபானா, இபானேமா போன்றவை எப்போதும் உள்ள அளவுக்கு எழில் மிக்க இடங்களாக காட்சியளிக்கவில்லை.

படத்தின் காப்புரிமை AFP

ஆங்காங்கே குப்பைகள் குவியல் குவியலாய் சேர்ந்து கிடக்க, துர்நாற்றம் வீசும் இடங்களாக அவை மாறிவிட்டுள்ளன.

கடற்கரையைத் தாண்டி நகரின் ஏழ்மையான பகுதிகளிலும் துப்புரவுச் சூழல் மிகவும் மோசமடைந்துள்ளது.

வேலைநிறுத்தம் செய்யாமல் பணிக்கு வரும் துப்புரவுத் தொழிலாளிகளுக்கு பாதுகாப்பு வழங்க பொலிசார் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

குப்பையை வெளியில் கொட்டாமல் வீடுகளுக்குள்ளேயே வைத்திருங்கள் என மக்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்திவருகின்றனர்.