சிரியா : கடத்தப்பட்ட கன்னியாஸ்திரிகள் விடுதலை

கடத்தப்பட்ட கன்னியாஸ்திரிகள் விடுதலை படத்தின் காப்புரிமை c
Image caption கடத்தப்பட்ட கன்னியாஸ்திரிகள் விடுதலை

சிரியாவின் கிறிஸ்தவ நகரான மாலௌலாவில் கடந்த டிசம்பரில் கிளர்ச்சிக்காரர்களால் கடத்தப்பட்ட கிறிஸ்தவ கிரேக்க பழமைவாத திருச்சபையைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகள் குழு ஒன்று விடுதலை செய்யப்பட்டுள்ளது.

கைதிகள் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த 13 கன்னியாஸ்திரிகளும், அவர்களது 3 உதவியாளர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

சிரியா- லெபனான் எல்லையில் உள்ள ஜுடாய்டாட் யாபுஸ் நகருக்கு அந்த பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக லெபனானிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

அரசாங்க மற்றும் கிளர்ச்சிப் படைகளால் பொதுமக்கள் கடத்தப்படுவது ஒரு சாதாரணமான விசயமாவது அதிகரித்து வருவதாக உரிமைக் குழுக்கள் கூறுகின்றன.

இந்த கன்னியாஸ்திரிகளின் கடத்தல் காரணமாக, கிளர்ச்சிக்காரர்களால் கிறிஸ்தவர்கள் இலக்கு வைக்கப்படுவதான அச்சம் அதிகரித்துள்ளது.

கடந்த டிசம்பரில் டமாஸ்கஸுக்கு வடகிழக்கே, 40 மைல் தொலைவில் மாலௌலாவை பிடித்தபோது, மார் தக்லாவில் கிரேக்க பழமைவாத திருச்சபையின் கன்னியாஸ்திரிகளுக்கான மடத்தில் இருந்து அல்கைதாவுடனான தொடர்பைக் கொண்ட நுஸ்ரா முன்னணி உட்பட, எதிர்க்கட்சிப் போராட்டக்காரர்களால், இந்தப் பெண்களைக் கடத்திச் சென்றதாக செய்திநிறுவனம் ஒன்று கூறுகிறது.