வங்கதேச ஆயத்த ஆடை நிறுவனங்களில் சோதனை

வங்கதேச ஆயத்த ஆடை நிறுவனங்களில் சோதனை
Image caption வங்கதேச ஆயத்த ஆடை நிறுவனங்களில் சோதனை

வங்கதேசத்தின் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனங்களில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்காவை சேர்ந்த துணி வாங்கும் நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில், ஒரு சில ஆலைகளில் தீ, பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு தொடர்பான பிரச்சனைகள் இருப்பதை கண்டறிந்துள்ளது.

'அக்கார்ட்' என்ற குடையின் கீழ் இந்த நிறுவனங்கள் கடந்த ஆண்டு முதல் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. வங்கதேசத்தில் கிட்டதட்ட ஐந்தாயிரம் ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன.

78 ஆலைகள் 'அக்கார்ட்' அமைப்பின் சோதனைக்கு கீழே வருகின்றன். இவற்றில் 10 ஆலைகள் மீதான முதற்கட்ட அறிக்கையில், பாதுகாப்பு குறைப்பாடுகள் தொடர்பான பல்வேறு விஷயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அதிகமாக பளு ஏற்றப்பட்ட கூரைப்பகுதிகள், வெளிப்படையாக தெரியும் ஒயர்கள், அடைக்கப்பட்ட அவசர கால வழிகள் போன்றவற்றை குறிப்பிடலாம்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரானா பிளாசாவில் ஏற்பட்ட விபத்தில் 1000 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர், பலர் தங்களது கைகால்களை இழந்திருந்தனர். இதனை தொடர்ந்து கிட்டதட்ட 22 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த ஆயத்த ஆடை தொழிற்துறையின் செயல்பாடுகள் கண்காணிப்பு வளையத்திற்குள் வந்துள்ளன.

இதே போன்று 2012 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மற்றுமொரு ஆலையில் இடம்பெற்ற தீ விபத்தில் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.

உலகத்தின் மாபெரும் ஆடை பிராண்ட்களான ஹெச் அண்ட் எம், இண்டிடெக்ஸ் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் 'அக்கார்ட்' அமைப்பில் சேர்ந்துள்ளன. இதன் மூலம் வங்கதேசத்தில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனங்களில் தீ மற்றும் கட்டிட பாதுகாப்பு வசதிகளை மேற்பார்வையிட இவை முடிவு செய்து கடந்தாண்டு மே மாதம் ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டன.

2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பாக கிட்டதட்ட 1500 ஆலைகளில் சோதனை மேற்கொள்ள இவர்கள் உத்தேசித்துள்ளனர். ஆலைகளில் தீவிரமான பாதுகாப்பு குறைப்பாடுகள் காணப்பட்டால், அவற்றை மூட இவர்கள் வங்கதேச அரசுக்கு பரிந்துரைக்க முடியும்.