தேவயானி மீது அமெரிக்காவில் மீண்டும் வழக்குப் பதிவு

படத்தின் காப்புரிமை Reuters
Image caption மீண்டும் குற்றச்சாட்டுகள்

இந்தியாவின் நியுயார்க் துணைத்தூதராக இருந்த தேவயானி கோபர்கடே மீது ஏற்கனவே தொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதியப்பட்டிருக்கின்றன.

நியூயார்க் தெற்கு மாவட்ட வழக்கறிஞரின் அலுவலகத்திலிருந்து சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய குற்றச்சாட்டுகள், தேவயானிக்கு எதிராக போடப்பட்ட முந்தைய வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு இரண்டு நாட்களில் வருகின்றன.

தேவயானிக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதியப்பட்டபோது ராஜியப் பாதுகாப்பு இருந்ததால் அந்தக் குற்றச்சாட்டுகளை நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். ஆனால் மீண்டும் குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம் என்றும் அவர் கூறியிருந்தார்

நியுயார்க்கில் இந்திய துணைத்தூதராகப் பணிபுரிந்துவந்த தேவயானி கோபர்கடே , அவர் வீட்டில் பணிபுரிய, இந்தியாவிலிருந்து சங்கீதா ரிச்சர்ட்ஸ், என்ற பெண்ணை பணிப்பெண்ணாக அழைத்துவர , விசா விண்ணப்பித்ததில், தவறான தகவல்களைத் தந்தார், விசா விண்ணப்பத்தில், சங்கீதாவுக்கு தருவதாகச் சொல்லியிருந்த சம்பளத்தை உண்மையில் தரவில்லை என்பது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள்.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே கசப்பான ராஜிய சச்சரவு ஒன்றுக்கு இந்த சம்பவம் வழிவகுத்தது.

இந்தியா , தேவயானி கைது செய்யப்பட்டது மற்றும் நிர்வாணமாக்கி சோதனையிடப்பட்டதை கடுமையாகக் கண்டனம் செய்து, அதற்கு பதிலடியாக, இந்தியாவில் இருக்கும அமெரிக்கத் தூதரகத்துக்குத் தந்திருந்த பல சலுகைகளை விலக்கிக்கொண்டது.

முந்தைய வழக்கில் குற்றச்சாட்டுகள் பதியப்படும் நிலையில், இந்தியா , தேவயானியை, நியுயார்க்கில் இருக்கும் ஐ.நா மன்றத்தின் இந்திய தூதரகத்துக்கு மாற்றி, அவருக்கு மேலதிக ராஜியப் பாதுகாப்பைப் பெற உதவியது.

இதையொட்டி, அவருக்கு அமெரிக்க வெளியுறவுத்துறையும் அவருக்கு ராஜியப் பாதுகாப்பை வழங்கினாலும், அந்த பாதுகாப்பை விலக்கிக்கொள்ளுமாறு இந்தியாவைக் கோரியது. இந்தியா அதற்கு உடன்படாத நிலையில், தேவயானியை அமெரிக்காவிலிருந்து விலக்கிக்கொள்ளுமாறு இந்திய அரசைக் கோரியது.

இதையடுத்து தேவயானி அமெரிக்காவிலிருந்து இந்தியாவால் டில்லிக்கு மாற்றப்பட்டார்.

ஆனால் பதிலடியாக இந்தியாவும் , இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் , ஒரு அதிகாரியை இந்தியாவில் இருந்து வெளியேற்றியது.

இந்தச் செய்தி குறித்து மேலும்