வேலைநிறுத்தம் வேண்டாம்: சௌதி வாழ் இந்திய தொழிலாளர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை

சௌதி அரேபியாவில் இருக்கின்ற இந்தியக் குடிமக்களை அங்கே வேலைநிறுத்தம் செய்ய வேண்டாம் என்று இந்திய தூதரகம் எச்சரித்திருக்கிறது.

அங்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுகின்றவர்கள் சௌதி அரேபிய நிர்வாகத்தால் கைதுசெய்யப்படுகின்ற அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுகின்ற நிலைமையை எதிர்நோக்க வேண்டிவரும் என்று இந்திய நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சௌதி தலைநகர் ரியாத்தில் மருத்துவமனைத் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருக்கின்ற இந்தியப் பெண்கள் சிலர், கடந்த ஒன்பது மாத காலமாக தனக்கு சம்பளம் தரப்படவில்லை எனக் கூறி வேலைநிறுத்ததில் இறங்கியதை அடுத்தே இந்தியத் தூதரகத்தில் இருந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட பணியாளர்களுடனும், அவர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள நிறுவனத்துடனும் தாங்கள் பேசுவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சௌதியில் பணியாற்றும் வெளிநாட்டுப் பணியாளர்கள் (துப்புரவு பணிபோன்ற வேலைகளில் செய்பவர்கள்) சுரண்டலுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாகுவதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.