50 ஆண்டு சிறை வாசம்: ஜப்பானில் மரண தண்டனைக் கைதி விடுவிப்பு

படத்தின் காப்புரிமை AFP
Image caption இவாவோ ஹக்காமாதா

ஜப்பானில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த நிலையில் சுமார் 50 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்து வந்த கைதி ஒருவரை விடுவித்து நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.

அவரது வழக்கு மீது மறுவிசாரணை நடத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தற்போது 78 வயதாகும் இவாவோ ஹக்காமாதா ஒரு குத்துச் சண்டை வீரர்.

மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த நிலையில் உலகில் நீண்டகாலம் சிறைவாசம் அனுபவித்தவர் இவர் தான் என்று கருதப்படுகின்றது.

தனது எஜமானையும் அவரது மனைவியையும் அவர்களின் இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்தமை தொடர்பிலேயே அவர் ஆரம்பத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டார்.

ஆனால் ஷிசோகா நகர நீதிமன்றம் அவரது மரண தண்டனையை இடைநிறுத்தியுள்ளது.

கொலைச் சம்பவ இடத்திலிருந்து கிடைத்த ஆடைகளிலிருந்து கிடைத்த இரத்தத்தின் டிஎன்ஏ மரபணுத் தகவல்கள் ஹக்கமாதாவினது அல்லவென்று அவரது வழக்குரைஞர்கள் நீதிமன்றத்துக்கு சுட்டிக்காட்டியுள்ளனர்.

விசாரணையாளர்கள் சாட்சி ஆதாரங்களை போலியாக சோடித்திருக்கலாம் என்று நீதிபதி கூறுகிறார்.