ஜி-எஸ்-கே மருந்தில் கழிவுப் பொருள் கலப்பு: அமெரிக்கா

படத்தின் காப்புரிமை PA
Image caption மருந்துக் கழிவு கலப்பினால் மனித ஆரோக்கியத்துக்கு பாதிப்பில்லை என்கிறது ஜி-எஸ்-கே நிறுவனம்

கிளாக்ஸோஸ்மித்க்ளைன் (GlaxoSmithKline) நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட மருந்துப் பொருட்களையும் அந்த நிறுவனத்தின் மருந்து மூலப்பொருட்களையும் இறக்குமதி செய்வதை கட்டுப்படுத்தப் போவதாக அமெரிக்க அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கிளாக்ஸோஸ்மித்க்ளைன் நிறுவனத்தின் அயர்லாந்தில் இருக்கின்ற தொழிற்சாலை ஒன்றில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தத்துக்கான மருந்தின் முக்கிய மூலப்பொருளொன்றில் மருந்துத் தயாரிப்பு கழிவுப் பொருட்கள் கலந்துள்ளதாக அமெரிக்க உணவு மற்றும் மருத்துவ கண்காணிப்பாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

உலகின் மிகப்பெரிய மருந்து நிறுவனங்களில் ஒன்றான கிளாக்ஸோஸ்மித்க்ளைன், இந்த கண்டறிதல் பற்றி முழுமையாக விசாரணை நடத்தாமல் மருந்து ஏற்றுமதியை தொடர்ந்தும் நடத்தியுள்ளதாகவும், அதுபற்றி நுகர்வோருக்கு அறிவுறுத்தல் வழங்க தவறியுள்ளதாகவும் அமெரிக்க கண்காணிப்பாளர்கள் கூறுகின்றனர்.

ஆனால், குறித்த மருந்து கழிவுப்பொருள் கலப்பினால் மனித ஆரோக்கியத்துக்கு அச்சுறுத்தல் இல்லை என்று கிளாக்ஸோஸ்மித்க்ளைன் (G-S-K) நிறுவனம் கூறியுள்ளது. எனினும் அயர்லாந்தின் கொர்க் நகர தொழிற்சாலையில் தயாரான சில தொகுதி மருந்துப் பொருட்களை ஜி-எஸ்-கே நிறுவனம் மீள அழைத்துக் கொண்டுள்ளது.