ஆஸ்திரேலியக் கப்பலுக்கும் கடலுக்கடியில் இருந்து வரும் சமிக்ஞை கேட்டது

விமானத்தைத் தேடிவரும் ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பல் ஒன்று படத்தின் காப்புரிமை Reuters
Image caption விமானத்தைத் தேடிவரும் ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பல் ஒன்று

காணாமல்போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தை தேடிவரும் ஆஸ்திரேலிய கடற்படைக் கப்பல் ஒன்று, விமான பதிவுக் கருவிகள் எழுப்பும் விதமான சமிக்ஞையைக் கடலுக்கடியிலிருந்து கேட்டுள்ளதாக தேடுதல் பணிகளை ஒருங்கிணைத்து நடத்தும் ஆஸ்திரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுவரையில் கிடைத்துள்ள மிக முக்கியமான மற்றும் நம்பிக்கை அளிக்கக்கூடிய அறிகுறி இதுதான் என தேடல் பணி ஒருங்கிணைப்பாளர் அங்கஸ் ஹூஸ்டன் கூறினார்.

ஓஷன் ஷீல்ட் என்ற கடற்படைக் கப்பல், இந்தியப் பெருங்கடலின் தென்பகுதியில் ஆஸ்திரேலியாவிலிருந்து ஆயிரம் கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள ஒரு கடல் பரப்பில் இந்த சமிக்ஞையைப் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சமிக்ஞை காணாமல்போன விமானத்துடைய பிளாக் பாக்ஸில் இருந்துதான் வருகின்றனவா என்பதை உறுதிசெய்ய நாட்கணக்கில் ஆகும் என்று ஹூஸ்டன் குறிப்பிட்டார்.

ஒரு மாத காலமாக இந்த விமானத்துக்காக நடந்துவந்த தேடலில், விசாரணையாளர்கள் எதிர்பார்த்திருந்த திருப்புமுனையான தருணம் வந்துவிட்டதென்று சொல்லலாம் என பெர்த்திலுள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.

பதிவுக் கருவியின் மின்சக்தி விரைவில் காலாவதியாகும் என்ற நிலையில், மிகவும் அவசரத்துடன் தேடுதல் பணிகள் நடந்துவந்தன.

இந்த விமானத்தின் சிதிலம் எதுவும் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்தச் செய்தி குறித்து மேலும்