புதையல் ஆசையில் வீட்டில் சுரங்கம் தோண்டியவர் சுரங்கத்தில் சிக்கினார்

படத்தின் காப்புரிமை eyewire
Image caption பொன்னாசையில் மண்ணைத் தோண்டியவரின் கதி என்ன ?

பெரிய புதையல் கிடைக்குமென்று சாமியார் கனவு கண்டு கூறியதை அடுத்து இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில்,இந்தியத் தொல்லியல் ஆய்வு நிறுவனமே ஒரு கோட்டையைத் தோண்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை எழுப்பியது.

ஆனால் இப்போது, பாகிஸ்தானில் ரிக்க்ஷாக்காரர் ஒருவர், அவருடைய உள்ளூர் சாமியார் ஒருவர் , அவர் வீட்டினடியில் பெரும் புதையல் இருக்கிறது என்று சொன்னதை நம்பி வீட்டிற்கடியில் சுரங்கம் தோண்டி புதையலைத் தேடப்போய், இப்போது அந்த சுரங்கத்தில் இரண்டு நாட்களாக வெளியே வரமுடியாமல் சிக்கியிருக்கிறார் என்று செய்திகள் கூறுகின்றன.

அவரை மீட்கும் வேலைகள் நடந்து கொண்டிருந்தாலும், அவர் உயிருடன் இருப்பார் என்ற நம்பிக்கைகள் குறைவாகவே இருக்கின்றன என்று கூறப்படுகிறது.

பாகிஸ்தானின் முல்டான் நகரில் வசிக்கும் 22 வயது ஸீஷான் குரேஷி என்ற ரிக்க்ஷாக்காரர் அவருடைய வீட்டில் தங்கமும் வெள்ளியும் அடங்கிய புதையல் இருக்கிறது என்று அவருடைய ஆன்மீகத் தலைவர் சொன்னதை, அந்த சொந்த வீட்டிற்குள்ளேயிருந்து தரையை கடந்த சில மாதங்களாகத் தோண்ட ஆரம்பித்தாராம்.

சனிக்கிழமையும், இதே போல , கடப்பாரை மற்றும் பிற கருவிகளுடன் சுரங்கத்துக்குள்ளே அவர் சென்றிருக்கிறார்.

ஆனால் நள்ளிரவு வரை அவர் திரும்பி வராததால், அவரது தந்தை அவசர உதவிச் சேவை பணியாளர்களை அழைத்திருக்கிறார்.

ஆனால் மீட்புப் பணியாளர்களோ ,அவர் தோண்டிய இந்த சுமார் 12 மீட்டர் நீளமுள்ள சுரங்கம் இடிந்து விழுந்திருக்கக்கூடும் , அந்த இடிபாடுகளில் ஸீஷன் குரேஷி சிக்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கிறார்கள்.

இதிலே , இந்த சுரங்கத்தில், புதையல் எதுவும் கிடைக்காதது மட்டுமல்ல, இந்த சுரங்கம் தோண்டிய வேலையில், ஸீஷானின் வீட்டின் அஸ்திவாரமும், அதே போல அண்டை வீடுகள் சிலவற்றின் அஸ்திவாரமும் பலவீனமடைந்திருக்கக்கூடும் என்று தெரிகிறது.

சுரங்கத்திலிருந்து ஸீஷானை மீட்கும் வேலைகள் நடந்துகொண்டிருந்தாலும், அவர் உயிருடன் இருப்பர் என்ற நம்பிக்கைகள் குறைந்து கொண்டே வருகின்றன.

இதற்கிடையில், ஸீஷான் வீட்டின் அடியில் புதையல் இருப்பதாகக் கூறிய சாமியார் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்துள்ளதாக உள்ளூர் காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.