7 குழந்தைகள் கொலை, உடல்கள் அட்டைப் பெட்டியில் ஒளித்து வைப்பு, தாய் கைது

படத்தின் காப்புரிமை AP
Image caption ஏழு குழந்தைகளின் உடல்கள் அட்டைப் பெட்டியில் கண்டெடுக்கப்பட்ட அமெரிக்க வீடு

அமெரிக்க மாநிலமான யுட்டாவில், ஒரு இறந்த குழந்தை குறித்து கிடைத்த தகவலை அடுத்து விரைந்த போலிசார், அங்கு அந்தக் குழந்தையின் உடலுடன், அட்டைப்பெட்டிகளில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த வேறு ஆறு குழந்தைகளின் உடல்களையும் கண்டுபிடித்தனர்.

இந்த ஏழு குழந்தைகளின் தாய் என்று கருதப்படும் மேகன் ஹண்ட்ஸ்மன் என்ற 39 வயதுப் பெண் இது தொடர்பில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

அவர் மீது கொலைக்குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

ஒரு 10 ஆண்டு கால கட்டத்தில் இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்துப் பின்னர் அவைகளைக் கொன்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

இந்தக் குழந்தைகளின் உடல்கள் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றன. அவை எப்படி இறந்தன என்பதைக் கண்டறிய இந்த சோதனைகள் நடத்தப்படும்.

அவரது வீட்டின் கார் கேரேஜில் இந்தப் பெட்டிகள் இருந்ததாகவும்,அவரிடமிருந்து பிரிந்திருக்கும் அவரது கணவர் முதல் குழந்தையின் உடலை முதலில் கண்டுபிடித்துப் போலிசாருக்குத் துப்புத் தந்ததாகவும் கூறப்படுகிறது.

டாரென் வெஸ்ட் என்ற இந்தக் கணவர், சமீபத்தில் போதைப் பொருள் குற்றங்களுக்காகச் சிறை சென்றவர். அவர்தான் இந்தக் குழந்தைகள் பிறந்தபோது இந்தப் பெண்ணின் துணைவராக இருந்தார் என்று கூறப்படுகிறது.

ஆனால் அவருக்கு இந்தச் சம்பவங்கள் பற்றி ஏதும் தெரிந்திருக்கவில்லை என்று தாங்கள் கருதுவதாகப் போலிசார் கூறுகின்றனர். எனவே அவர் மீது எந்தக் குற்றச்சாட்டும் பதியப்படவில்லை.

எப்படி ஒரு கணவருக்கு, அவரது மனைவி ஏழு குழந்தைகளைப் பெற்றெடுத்தது தெரியாமல் போயிருக்கும் என்று கேட்டதற்கு, "இது ஒரு மில்லியன் டாலர் கேள்வி, மிகவும் சிக்கலானது" என்று போலிசார் கூறினர்.

ஒவ்வொரு பெட்டியையும் திறந்து பார்த்த போலிஸ் விசாரணையாளர்களே இது பற்றி மிகவும் அதிர்ச்சியடைந்தும், உணர்ச்சிவசப்பட்டும் போனதாக போலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.